‘பொன்னியின் செல்வன்’ ஆர்.எம். வீ.! ‘RMV THE KINGMAKER’
எம்.ஜி.ஆர். என்றதும் நினைவுக்கு வருபவர், அவரது மனசாட்சியாக விளங்கிய ஆர்.எம்.வீ. அவர்கள்தான்.
திரைத்துறையிலம் மட்டுமல்ல எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் அவரது நிழலாகவே விளங்கினார்.
ஆர்.எம்.வீ., திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமல்ல.. அற்புதமான படைப்பாளி. தனது படங்களின் கதை, காட்சிகள், வசனம், இயக்கம் குறித்து பல்வேறு ஆலோசனைகூறியவர். பல புத்தகங்களை எழுதியவர்.
ஒரு கட்டத்தில் அவரைச் சுற்றியே அரசியல் சுழன்றது. முக்கியமாக அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்ற காலத்தில், ஆர்.எம்.வீ.யின் அரசியல் வீச்சு வியக்கத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாக… எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், ஆர்.எம்.வீ.யை முதலமைச்சராக்க வேண்டும் என விரும்பி, கையெழுத்திட்டு அளிதத நிலையில்.. திடீரென ஜானகி அம்மாள், தானே முதலமைச்சராக விரும்புவதாகச் சொல்ல.. மறு பேச்சு இன்றி விட்டுக்கொடுத்தவர் ஆர்.எம்.வீ.!
பின்னாளில் அவரிடம் சாவி வாரஇதழுக்காக பேட்டி எடுத்தபோது, “நீங்களும் சோழ மண்டலத்தைச் சேர்ந்தவர்தான். பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் ராஜரகஜ சோழன், தனது சித்தப்பா மதுராந்தகருக்காக அரசர் பதவியை விட்டுக்கொடுத்தார். நீங்கள் கட்சி நலனுக்காக முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தீர்கள். உங்களையும் பொன்னியின் செல்வன் என அழைக்கலாம்” என்றேன்.
சற்றே வெட்கப்புன்னகையுடன், “அடடே… ராஜராஜன் எவ்வளவு பெரிய ஆளுமை.. அவருடன் என்னை ஒப்பிடுவதா.. நான் செய்தது கட்சி நலனுக்காக.. அதை பெரிது படுத்தாதீர்கள்” என்றார்.
அது மட்டுமல்ல.. குறிப்பிட்ட அந்த கேள்வியைத் தவிர்த்து விடும்படியும் கூறினார்.
பல முறை அவரிடம் வெவ்வேறு இதழ்களுக்காக தனி பேட்டிகள் எடுத்து இருக்கிறேன்.
அமைச்சராக இருந்தபோது, பதவி விலகிய பிறகு, தனிக்கட்சி துவங்கிய போது… இப்படி…! எல்லா நிலையிலும் ஒரே மாதிரியான மனநிலை – பக்குவத்துடன் – காட்சி அளித்தவர் அவர்.
பலரும் நினைப்பது போல, அவர் எம்.ஜி.ஆர். மூலமாக திரையுலகம் – அரசிலுக்கு வந்தவர் அல்ல. தந்தை பெரியார் மீதான பற்றினால் அரசியலுக்கு வந்தவர்.
இப்படியான அரிய தகவல்களை பலரும் சொல்ல, அற்புதமான வாழ்ககை வரலாற்று படமாக உருவாகி இருக்கிறது, ‘RMV THE KINGMAKER’!
தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் சார்பில், ஆர்.எம்.வீ. அவர்களின் புதல்வர் தங்கராஜ் வீரப்பன் தயாரிக்க, பினு சுப்பிரமணியம் இயக்கி இருக்கிறார்.
ஆர்.எம்.வீ. அவர்களுடன் பழகியே பல்வேறு ஆளுமைகள் தங்களது நினைவலைகளை அற்புதமாக பகிர்ந்துள்ளனர்.
● தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
● சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
● ஆர். சரத்குமார்
● சத்யராஜ்
● கவிஞர் திரு. வைரமுத்து
● ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி நம்பி நாராயணன்… இப்படி!
1926-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி ஆர்.எம்.வீரப்பன் பிறக்கிறார். பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டு, குடியரசு இதழில் வேலை செய்து, பின் அண்ணாவோடு இணைந்து பணியாற்றி, அதன்பின் எம்.ஜி.ஆரோடு இணைந்து மூச்சிருக்கும் வரை MGR என்ற மூன்றெழுத்தோடு பயணித்து, அதன்பின்னர் எம்.ஜி.ஆர் வழிபடி நடந்த ஜெயலலிதாவோடும் அரசியலில் கோலோச்சியவர் ஆர்.எம்.வீ.
பாட்சா திரைப்பட விழாவில் ரஜினி பேசிய பேச்சு காரணமாக, ஆர்.எம்.வீ.யின் அமைச்சர் பதவியை பறித்தார் ஜெயலலிதா. இது குறித்த தகவலை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
பத்திரிகையாளர் ரா.கண்ணன் அவர்கள் பகிரும் தகவல் மிக முக்கியமானது மட்டுமின்றி உணர்ச்சிகரமானதும் கூட. 1969- தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெறுகிறது. அந்த வெற்றி முகத்துக்கு எம்.ஜி.ஆரின் முகமே பெருங்காரணம். ஆனால் கலைஞர் எம்.ஜி.ஆருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. கட்சியின் பொருளாளர் ஆக இருக்கும் எம்.ஜி.ஆர் கணக்கு வழக்கை கலைஞரிடம் கேட்கிறார். கலைஞர் எம்.ஜி.ஆரை உடனே கட்சியை விட்டு நீக்குகிறார்.
பதறிப்போகும் ஆர்.எம்.வீரப்பன் கலைஞரையும் எம்.ஜி.ஆரையும் இணைக்க கடுமையான முயற்சியை மேற்கொள்கிறார். முடியவில்லை. எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகச் சொல்கிறார். உடனே ஆர்.எம்.வீரப்பன் மின்னலாக வேலைகளைத் துரிதப்படுத்துகிறார். தனிக்கட்சி அறிவிப்பை எம்.ஜி.ஆர் வெளியிட்ட போது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்” என்று பேசுகிறார். அந்தப் பேச்சை எழுதிக்கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ளக் கூடிய நல்ல அம்சம் ஒன்றுள்ளது.
ஆர்.எம்.வீரப்பன் நினைத்தால் எம்.ஜி.ஆர் முடிவை ஏற்காமல் கலைஞரோடு இணைந்து நல்ல பதவிகளை அனுபவித்திருக்க முடியும். ஆனால் நட்பின் ஆழம் கருதி துயரிலும் எம்.ஜி.ஆரோடு நின்றார்; எம்.ஜி.ஆர் வென்றார். இப்படி பல வரலாற்றுத் தகவல்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது
பாட்ஷா பட சக்சஸ் மீட்டில் ரஜினி பேசிய வார்த்தைகளால் ஆர்.எம்.வீரப்பனுக்கு அமைச்சர் பதவி போனது. அந்த விசயத்தோடு சேர்த்து இன்னும் பல அரிய தகவல்களை ரஜினி சொல்கிறார். ஆர்.எம்.வீரப்பனின் பாடல் வரிகளின் தேர்வு குறித்து வைரமுத்துவும், முத்துலிங்கமும் பேசியிருப்பது சுவாரஸ்யமானவை. சரத்குமார், திருமாவளவன், தமிழிசை, ரங்கராஜ பாண்டே, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட இன்னும் பல்வேறு ஆளுமைகளின் காணொளி சொற்கள் வழியாக இரண்டு மணி நேரத்தில் ஒரு வெற்றிகரமான மனிதரின் நேர்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. ஆவணப்படம் என்றாலும், இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அற்புதமாக தொகுத்திருக்கிறார் பினு சுப்பிரமணியம். எங்குமே போரடிக்கவில்லை. பெரியார் கொள்கை பிடிப்புள்ள ஆர்.எம்.வீரப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தை புனரமைத்த செய்தியெல்லாம் தரமான ரகம்.
இன்னொரு முக்கியமான விசயம்… குறளின் அடிப்படையில், தந்த மகனுக்காற்றும் கடமை.. அவையில் முந்தியிருக்க வைப்பது. அதை ஆர்.வீ. சிறப்பாகவே செய்து இருக்கிறார்.
அதே போல அவரது மகன் தங்கராஜ் வீரப்பன் அவர்களும், அவையில் முந்தியிருக்கிறார்.. அதே போல, தந்தையையும் அவையில் அதாவது காலத்தில் முந்தியிருக்கச் செய்து இருக்கிறார். அதற்கான அற்புதமான ஆவணப்படத்தை அளித்து இருக்கிறார்.
ஆர்.எம்.வீ. அவர்களுக்கு நமது புகழ் வணக்கங்கள்.. தங்கராஜ் வீரப்பன் அவர்களுக்கு நமது நன்றிகளும், வாழ்த்துகளும்!
வரலாற்றை அறியாதவர் நிகழ்காலத்தை உணர முடியாது.. எதிர்காலம் குறித்து சிந்தக்கவே முடியாது
தமிழ்த் திரையுகின், தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்கிய அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களின் இந்த வரலாற்றுப் படத்தை அவசியம் பாருங்கள்!
– டி.வி.சோமு

