விமர்சனம்: மாமன்னன்

விமர்சனம்: மாமன்னன்
 
‘ஆதிக்க வெறி என்பது சாதிக்குள் மட்டும் அடங்கிவிடுவது இல்லை. அரசியல், பணம் என பல்வேறு கூறுகளில் அது வெளிப்படும். எந்த வகையில் வெளிப்பட்டாலும் அதை ஒடுக்க வேண்டும்’ என அற்புதமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
சேலம் காசிபுரத்தின் சட்டமன்ற உறுப்பினர் மாமன்னனின் மகன் அதிவீரன். அனைவரும் சமம் என நினைப்பவர்;
 
அதே ஊரில் – அதே கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ரத்தினவேலு . எல்லோரையும் விட தான் உயர்ந்தவன் என்கிற அதிகாரத் திமிர் கொண்டவர்.
 
இருவருக்குமான மோதல்… அதன் விளைவு.. ஆகியவையே கதை.
ஆதிக்க வெறியர் ரத்தினவேலுவாக ஃபகத் ஃபாசில்.
 
சாதியைச் சொல்லி, எம்.எல்.ஏ.வையே உட்கார அனுமதிக்காகவர்; அதே நேரம் தன் சாதிக்காரனையே போட்டுத்தள்ளுபவர்; தன் அண்ணனையே ‘முட்டாள்’ என அடக்கி வைப்பவர்…!
மொத்தத்தில் ஆதிக்க வெறியின் உச்சம்.
 
“என்னோட ஜாதி **** காப்பாத்துறது எல்லாம் என் வேலையில்ல. எங்க அப்பா எனக்கொரு இடத்தை இங்க உருவாக்கி வச்சிருக்கார். நான் என் பையனுக்கு அப்படியானதொரு இடத்தை உருவாக்கி தரணும்” என்ற ரத்தினவேலுவின் வசனமே அவரது அதிகார வெறி குணத்தை வெளிப்படுத்திவிடும்.
இந்த கதாபாத்திரத்தக்கு உயிர் கொடுத்து இருக்கிறார் பகத்பாசில்.
ஆகா வடிவேலுவா இது..! கைப்புள்ள, நாய் சேகர் என சிரிக்க வைத்தவர்…. இந்தப் படத்தில் நெகிழ வைக்கும் மாமன்னன் கதாபாத்திரத்தில் வருகிறார்.
 
ஆரம்ப காட்சியிலிருந்தே இறுக்கமான முகம், நிதான மான பேச்சு என கவனத்தை ஈர்க்கிறார். மா.செ. முன் பவ்யமாக நிற்பது.. பிறகு ஒரு கட்டத்தில் மா.செ. முன் துப்பாக்கி நீட்டி, ‘சின்ன வயசிலேருந்து உன்னை தூக்கி வளர்த்தவன்டா நானு’ என்று சொல்வதாகட்டும்… அற்புதம்!
குறிப்பாக, தன் மகனுக்காக நியாயம் கேட்டு வெடவெடுத்துப்போய் நிற்குமிடத்தில் நம்மை அழ வைத்துவிடுகிறார். 
கீர்த்தி சுரேஷ் நாயகி… நியாயத்துக்காக போராடும் பெண். அவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை.
 
போஸ்டரில் குறிப்பிட்டு இருப்பது போலவே, இவர்களுக்கு அடுத்தபடியாக உதயநிதியைச் சொல்லலாம். அதே நேரம், தனக்கான கதாபாத்திரத்துக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்து இருக்கிறார்.
குறிப்பாக, ‘ அப்பா நீ உட்காருப்பா’ என்று குமுறலாகச் சொல்வது.. அடுத்து ஆத்திரமாக்ச சொல்வது… சிறப்பு.
வசனங்கள் பல குத்தீட்டி…
 
‘ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்!’
 
‘யாரு சொன்னாலும் என் எதிர்ல உன் அப்பா உட்கார மாட்டார்’
‘நீங்க சொல்லி இருக்கீங்களா..’
 
‘உன் அப்பாவ இங்க நிக்க வச்சு இருக்குறது என்னோட அடையாளம். உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்’
 
‘இங்க ஆதங்கப்படுறதுக்குக்கூட ஒரு தகுதி வேணும் போல’ ; ‘ நான் இத்தனை வருஷமா எனக்கு கிடைச்சது எனக்கான உரிமைன்னு நினைக்காம, எனக்கு அவங்க போட்ட பிச்சைன்னு நினைச்சதுதான்’
 
– இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
படத்தில் இன்னொரு கதாபாத்திரமாகவே வருகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ! பாடல்களும் ரசிக்கவைக்கின்றன.
 
காட்சியின் வெம்மையை, ஒளியில் கடத்தி நமக்குத் தந்திருக்கிறார் தேனி ஈஸ்வர். குறிப்பாக மலை தொடர்பான காட்சிகள்.. மாமன்னன், ரத்தினவேலு வீட்டில் நிகழும் காட்சிகள்..
 
நாய்க்குட்டி, பூனைக்குட்டி மட்டுமல்ல.. பன்றிக்குட்டியும் அழகுதான் என்பதை காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. காதல், மோதல், மசாலா என அந்தப் பக்கம் போகாமல் முழுமையான சமூகப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சிறப்பு.
 
மொத்தத்தில், ‘அதிகாரம் என்பது சாதியின் வழியாக மட்டுமல்ல.. அரசியல், பணம் என பலவற்றின் மூலமாக வெளிப்படுகிறது.. எந்த வகையில் அது வெளிப்பட்டாலும் அழிக்கப்பட வேண்டும்’ அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்!
 
இத்தனை சிறப்புகள் இருக்கின்றன.. படத்தில் மைனஸே இல்லையா.. என்றால் இருக்கின்றன.
 
பல காட்சிகளை எளிதாக யூகித்துவிட முடிகிறது.. குளத்தில் சிறுவர்கள் குளிக்கப் போகும்போதே அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது, போட்டியில் தோற்ற நாயை ரத்தினம் கொல்வான் என்பது, பன்றிகளை கொல்வார்கள் என்பது, தன் சாதியைச் சேர்ந்த சங்கத் தலைவரையே ரத்தினம் கொல்வான் என்பது…
 
எல்லாவற்றுக்கும் மேலாக, அதிவீரன் தன் தந்தையை நாற்காலியில் உட்காரவைப்பான் என்பது!
லாஜிக் இல்லாத காட்சிகள்..  எம்.எல்.ஏ. வீட்டில் அவரது ஆதரவாளர்கள் ஒருவர்கூடவா இருக்க மாட்டார்கள்.. எதிரிகள் வரும்போது அவரும், மகனும் மட்டுமே எதிர்கொள்கிறார்கள்.
 
இரு முறை எம்எல்ஏவாக இருந்தவர், அவர் மகன் பன்றி வளர்க்கிறார் என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்லவில்லை. பிறகு எப்படி அத்தனை பெரிய பங்களா?  (ஒருவேளை, சமத்துவத்தை விரும்பும் அந்த எம்எல்ஏ, நேர்மையை விரும்புவது இல்லையோ..)
 
அதே போல குறியீடுகள் என்ற பெயரில் அடிக்கடி நாய், குதிரை, பன்றிகள் வந்து குறிக்கிடுகின்றன.
 
அதே நேரம் குறியீடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என இந்தப் படத்திலேயே ஒரு காட்சி உள்ளது.
‘சாவி எங்கே..’
‘புத்தர் சிலைக்கு பக்கத்தில..’
– படத்துக்கு தொய்வு ஏற்படுத்தாத இப்படியான குறியீடுகளையே வையுங்கள் மாரி செல்வராஜ்.
 
அடுத்து இரண்டாம் பாதிக்கான திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லை. காட்சிகள், ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக பல காட்சிகள் மெதுவாக நகர்கின்றன, ஸ்லோ மோசன் காட்சிகளும் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தேவையில்லாத சண்டைக்காட்சிகளும் படத்துக்கு தடங்கல்தான்.
 
தவிர, முக்கியமான சில காட்சிகள் படு செயற்கையாக இருக்கின்றன. உதாரணமாக, சோசியல் மீடியாவில் பேசியே தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவதாக காண்பிப்பது நம்பும்படியாக இல்லை.
அதிகாரத்துக்கு எதிரான குரலாக ஒலிக்கும் படத்துக்கு மாமன்னன் என, அதிகார குறியீட்டின் பெயரை வைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். குறியீடுகளில் வல்லவர் அவர். ஆகவே, ‘உன் அதிகாரத்தை நான் கைப்பற்றுவேன்.. உன்னை அதிகாரம் செய்வேன்’ என்று சொல்லாமல் சொல்கிறாரோ!
 
படத்தின் நிறை குறைகளை மீறி…
 
காதல் – மசாலா பட உலகில் அதிலிருந்து விலகி, அதிகாரத்துக்கு எதிரான படம் இது என்பதால் ஈர்க்கிறது.
 
அரசியல் ரீதியாக ஒரு சம்பவம் சொல்லப்படுவது உண்டு.
அதிமுகவைச் சேரந்த முன்னாள் சபாநாயகர் தனபால், அக்கட்சியின் (மறைந்த) பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், “நான் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதால், கட்சிக்காரர்கள் என் வீட்டில் சாப்பிடுவதில்லை” என்று வருந்தினாராம்.
 
இதனால்தான் அவரை உணவுத்தறு அமைச்சர் ஆக்கினாராம் ஜெயலலிதா. தொடர்ந்து, அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளிக்க வேண்டிய சபாநாயகர் பதவியும் அளித்தாராம்.
இந்த சம்பவம்தான் மாமன்னன் படம். அதே நேரம் படத்தில் தி.மு.க. போன்ற கொடி, அக்கட்சி பேசும் சமூக நீதியை குறிக்கும் கட்சிப் பெயர், கருணாநிதியின் கரகர குரல் முதல்வர் என்று குறியீடுகளை வைத்து இருக்கிறார் மாரி செல்வராஜ்.
 
இதில் உதயநிதி நடித்திருப்பது ஆச்சரியம்தான். எப்படியானாலும் அதிகாரத்துக்கு எதிரான குரலாக ஒலிக்கும் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருப்பது பாராட்டத்தக்கதே.
 
 

Related Posts