விமர்சனம்: ஜே பேபி : மகளிர் தினத்தில் ஓர் மணிமகுடம்

விமர்சனம்: ஜே பேபி : மகளிர் தினத்தில் ஓர் மணிமகுடம்

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  உருவாக்கப்பட்டு உள்ள ஓர் அற்புத படைப்பு ஜெ.பேபி.

கதையின் நாயகி ஜெ.பேபிக்கு வயது ஐம்பது ப்ளஸ். கணவர் இறந்த நிலையில், தனது இரு மகள்கள் மற்றும் மகன்களுக்கு திருமணம் முடித்துவிடுகிறார். பிள்ளைகள் வீட்டில் மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.

குடும்ப பிரச்சினை, வயது முதிர்வு காரணமாக சிறு அளவில் மனத் தடுமாற்றம்.  அக்கம்பக்கத்தினர் வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வந்துவிடுவது, வீட்டிலிருந்து மோதிரம் உள்ளிட்டவைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று, சிரமப்படுபவர்களுக்கு கொடுப்பது, யாரிடமாவது ஏடாகூடமாக பேசி வம்பை விலைக்கு வாங்குவது என்று தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்.

மனநல மருத்துவமனையில் பிள்ளைகளால் சேர்க்கப்படுகிறார்.  ஒரு மகன் மற்றும் ஒரு மகள் அருகில் இருக்கிறார்கள்.  ஒருநாள் இவரை விட்டுவிட்டு மகனும் மகளும் தங்கள் வீட்டிக்கு செல்கின்றனர்.

பிள்ளைகளுக்கு தன்மீது பாசம் இல்லை என்று நினைத்து அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார் பேபி.  அதுவே பிள்ளைகளுக்குத் தெரியவில்லை.

நான்கைந்து நாட்கள் கழித்து, பேபி கொல்கத்தாவில் இருப்பதாக உள்ளூர் போலீசுக்கு தகவல் வர, மகன்கள் இருவரும் தங்கள் தாய் பேபியை அழைத்து வர செல்கிறார்கள்.

அங்கிருந்தும் பேபி காணாமல் போய் விடுகிறார்.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக.. அதே நேரம் நகைச்சுவையும் கலந்து அளித்து இருக்கிறார்கள்.

ஊர்வசி நடிப்பு அரக்கி. இந்தப் படத்தில் மேலுமொரு புதிய நடிப்பெல்லையைத் தொட்டு இருக்கிறார்.

மன மாறுபாட்டினால் அவர் செய்யும் அட்ராசிட்டிகள், பொறுக்க முடியாமல் மகன் அடிக்கும்போது கலங்குவது, பிறகு அதற்கு விளக்கம் தருவது… முதிர்ந்த தாயாகவே வாழ்ந்திருக்கிறார் ஊர்வசி.இரவு ரோந்து போலீசிடம், ‘என்ன இப்படி தூங்குறே.. உன் வேலையையும் சேர்த்து நான் பார்க்க வேண்டி இருக்கு..’ என்று அதட்டல் போடும் காட்சி ஒரு சாம்பிள்.

ஊர்வசியின் இளைய மகனாக அட்டகத்தி தினேஷ். வழக்கம் போல் இயல்பான நடிப்பால் கவர்கிறார். ( ஆள்தான் கொஞ்சம் கூடுதல் எடை போட்டு இருக்கிறார்.. நாயகன் அந்தஸ்தை கடந்து குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு திரையுலகம் ஒதுக்கிவிடப்போகிறது. நல்ல நடிகர், தனது உடல் அமைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்!)

மூத்த மகனாக, லொள்ளு சபா மாறன். முதன் முறையாக இயல்பான நடிப்பில், ஈர்க்கிறார். தம்பி மீது காட்டும் கோபம், ‘சக்கர விக்க போனா மழை பெய்யுது.. பொறிவிக்க போனா காத்தடிக்குது..’ என்று நண்பர் சொல்ல..  ‘ஏன்.. ரெண்டையும் சேர்த்து பொறி உருண்டை ஆக்கி விக்க வேண்டியதுதானே..’ என இவர் கேட்கும்போது  சிரிப்பலை.

தாயைத் தேடும் இரு மகன்களுக்கு உதவும், ராணுவ வீரராக வருபவரும் நேர்த்தியான நடிப்பை அளித்து உள்ளார்.  உண்மையில் அம்மாவை தேடிச் சென்ற சகோதரர்களுக்கு உதவியவராம்!

டோனி பிரிட்டோவின் இசை, மனதை வருடுகிறது.   ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு சிறப்பு. கொல்கத்தாவை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறது.

சண்முகம் வேலுச்சாமி எடிட்டிங் கச்சிதம்.

வயதானவர்கள், மீண்டும் ஓர் குழந்தைப் பருவத்துக்குச் செல்கிறார்கள். அவர்களை – குறிப்பாக பெற்றோரை – குழந்தைபோல் பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்வு பூர்வமாக – இயல்பாக.. எல்லாவற்றுக்கும் மேல் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் முத்து மாரி.

மகளிர் தினத்தன்று வந்திருக்கும் சிறப்பான படம். மகளிருக்கு ஓர் மணிமகுடம்.

படத்தைப் பாருங்கள்… பெற்றோரின் மீதான  அன்பு கூடும். அக்கறை அதிகரிக்கும்.

இயக்குநர் சுரேஷ் மாரி அவர்களுக்கும், தயாரிப்பாளர் ( இயக்குநர்) பா.ரஞ்சித் உள்ளிட்டோருக்கும் ஓர் பாசக் கைக்குலுக்கல்!

Related Posts