மர்மம், திகில்: விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் பட டிரெய்லர்!
விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து உள்ளார். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி – விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்து இருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?:
இளையராஜாவின் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அடுத்தடுத்து வரும் காட்சிகளைப் பார்க்கையில், விஜய் ஆண்டனி தன்னுடைய கடந்த காலங்களை மறைக்க புதிய ஊர், புதிய மனிதர்களுடன் வாழ்கிறார் என்று தோன்றுகிறது. அதே நேரம், அவரின் மறுபக்கம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
“யாரைப் பத்தி, யாருக்கு தான் முழுசா தெரியும். ஒருத்தர பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிற முயற்சியில தானே இந்த உலகமே உருண்டுகிட்டு இருக்கு” என சரண்யா பொன்வண்ணன் பேசும் வசனம் கவனத்தை ஈர்க்கிறது.
“எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம அடுத்தவங்களுக்கு நல்லது நினைக்கிற மனசுதான் கடவுள். அப்படி பழகுற மனுசங்களுக்கு பிரச்சினைன்னா எப்டி சும்மா இருக்குறது” என்கிறார் விஜய் ஆண்டனி. இதை வைத்துப் பார்க்கையில், தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையில் அவர் தலையிட்டு தீர்ப்பார் என்பது புரிகிறது. இடையிடையே, ‘உறவுகள் தொடர்கதை’ பாடலின் துணுக்குகள் வருவது ரசிக்கவைக்கிறது.
இத்திரைப்படம், வரும் ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.