திரெளபதி 2: திரை விமர்சனம்

திரெளபதி 2: திரை விமர்சனம்

 மோகன் ஜி இயக்கம் என்றாலே,  வெறும் சினிமாவாக மட்டும் இல்லாமல், ஒரு சமூக விவாதப் பொருளாகவே தியேட்டர்களுக்கு வரும். அப்படித்தான்,  நேதாஜி புர டக் ஷன்ஸ் தயாரிப்பில் ரிச்சர்ட், நட்டி, ரக்ஷனா உள்ளிட்டோர் திரெளபதி 2ம் வெளியாகி இருக்கிறது.

திரெளபதி படத்தின் முதல் பாகம் போலி திருமணப் பதிவுகள் மற்றும் சட்டச் சிக்கல்களைப் பேசியது என்றால், இந்த இரண்டாம் பாகம், வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த சர்ச்சையுடன் ஆரம்பிக்கிறது. பிறகு,  பதினான்காம்  நுாற்றாண்டுக்குள் செல்கிறது கதை.

டில்லியை தலைநகராகக் கொண்டு,  இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை ஆண்ட துக்ளக், தேவகிரியை ஆண்ட அவர் தம்பி பல்வான், மதுரையை ஆண்ட தம்பானி ஆகியோரால் வட தமிழ்நாட்டில் என்ன மாதிரியான நிகழ்வுகள் நடந்தன என்பதைச் சொல்கிறார்கள்.

திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்கிறார் வீர வல்லாளர் (நட்டி). அவரது  விசுவாசியான தளபதி வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட்).

டில்லி, மதுரை ஆட்சியாளர்களால் வல்லாளர் கொல்லப்படுகிறதார்.  அவரை காக்க வேண்டிய பொறுப்பில் இருந்து வீரசிம்ம காடவராயர், தவறிவிட்டதாக அவரது மனைவி திரௌபதி நினைக்கிறார். ஆகவே பிரிகிறார்கள்.

இன்னொரு பக்கம் உரிமைப் போரில் ஈடுபடுகிறார் வீரசிம்ம காடவராயர். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

வீர வல்லாள மன்னர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் நட்டி. அவரின் நடை, உடை, ஆபரணங்களும் பக்காவாக செட்டாகி இருக்கிறது.

வீரசிம்மன் என்ற தளபதி கேரக்டரில் வருகிறார் ரிச்சர்ட் ரிஷி.  தனது முந்தைய படங்களை விட இதில் நடிப்பில் முதிர்ச்சி காட்டியிருக்கிறார். ஒரு பக்கம் ஆக்ரோஷமான ஆக்‌ஷன் காட்சிகள், இன்னொரு பக்கம் குடும்பப் பாசம் என இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார்.

அவரது மனைவி திரவுபதியாக ரக்ஷனாவும் சிறப்பாக நடித்து உள்ளார். வழக்கமான ஹீரோயின் இல்லை இவர்.  தன் கணவன் உள்ளிட்ட எவரைவிடவும், நாட்டின் உரிமையை முக்கியமாக நினைக்கிறார். அரசனை காக்காத கணவனை விலக்கி வைக்கிறார், மக்களுக்காக சுல்தானை சந்திக்க தனியே செல்கிறார்.. மொத்த்ததில் சிற்பபான கதாபாத்திரம்.. அதை உணர்ந்து ரக்ஷனாவும் சிறப்பாக நடித்து உள்ளார்.

வில்லன்களாக வரும் டில்லி சுல்தான் (சிராக் ஜானி), மதுரை தம்பானி (தினேஷ் லம்பா), தேவகிரி சுல்தான் பல்வான் ஆகியோர் மீது ஒருவித எரிச்சலே வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு சிறப்பாக நடித்த உள்ளனர்.  அந்த காலத்தில் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருந்து இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறார்கள்.ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அதே பல பின்னணி இசையில் அவர் காட்டியிருக்கும் அந்த உக்கிரம், பல இடங்களில் வசனங்களின் வீச்சை விடத் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

14 நுாற்றாண்டு கோட்டை, படைகள், அரண்மனை, போர், கோயில்கள் ஆகியவற்றை கமலின்  கலை இயக்கம் கண் முன் நிறுத்துகிறது.  சுந்தரின் கேமரா வொர்க்கும் தெளிவாக, அழகாக காண்பிக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் சுற்றிச் சுழன்றி பிரமிப்பூட்டுகிறது கேமரா.

அந்த காலகட்டத்தில்  இருந்த ஆட்சியாளர்களின் கொடூரத்தை, மக்களின் தவிப்பை, குறிப்பாக, மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியதை விவரிக்கிறது திரைப்படம். திரைக்கதையில் விறுவிறுப்பு,  அதிரவைக்கும்  கிளைமாக்ஸ், சண்டைக்காட்சிகள் என ரசிக்க வைக்கிறார் இயக்குநர் மோகன்ஜி.  தமிழக வரலாற்றின் இன்னொரு பக்கத்தை, மதத்தின் பெயரில் மக்கள், அரசர்கள் அனுபவித்த கொடுமைகளை துணிந்து சொன்ன விதத்தில், மதத்தை, மக்களை காக்க பலர் செய்த தியாகத்தை விவரித்து சொன்ன விதத்தில் திரெளபதி 2 முக்கியமான படமாக அமைகிறது.

 

Related Posts