திரைப்பட விமர்சனம்: ப்ளூ ஸ்டார்

உலக அளவில் விளையாடப்பட்டும் கிரிக்கெட்டை மையமாக வைத்து, உள்ளூர் சாதி மோதலை சிறப்பாக வெளிக்காட்டி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
அரக்கோணம் அருகே ஒரு சிறிய ஊர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அதே ஊரின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். இரு தரப்புக்குமே எப்போதும் ஆகாது. காரணம் சாதி.
இதனால், , ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை. ( ஏற்கெனவே இரு தரப்பு அணிகளும் மோதி, அது நிஜ மோதலாகி கிராமத்தில் வன்முறை ஏற்பட்டதையும் பிளாேஷ்பேக்கில் சொல்கிறார்கள்.)
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக, ஊர்க்கோவில் திருவிழாவில் இரு அணியினரும் போட்டியிடுகின்றனர். போட்டியில் வென்றே தீர வேண்டும் என நினைக்கும் ராஜேஷ், பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை, தனது அணிக்காக விளையாடச் செய்கிறார். அவர் நினைத்தது போலவே எதிர் அணி – காலனியின் ப்ளூ ஸ்டார் அணி – தோல்வி அடைகிறது. ஆனால் ராஜேஷ் சந்தோசப்பட முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, அந்த கிளப் அணியினர் ராஜேஷை அவமானப்படுத்தி வருகிறார்கள். உச்சகட்டமாக, அவரை கிளப் மைதானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியில் பிடித்துத் தள்ளுகிறார்கள். இதனால் மோதல் ஏற்படுகிறது. அப்போது ராஜேஷுக்கு ஆதரவாக ரஞ்சித் அணியினர் வருகின்றனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் மெல்ல நட்பு ஏற்படுகிறது. இரண்டு அணயும் இணைந்து ஒரே அணியாகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது ென்பதே கதை.
சமீபகாலமாக, தனது காதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதில் அசோக் செல்வன், கவனமாக இருக்கிறார். இந்தப் படத்திலும் சிறப்பான வேடம் அவருக்கு. கிரிக்கெட் மீதான ஆர்வம், தம்பியுடன் முரண்படும் காட்சிகள், காதலியிடம் உருகும் நேரம், அநீதியைக் கண்டு பொங்குவது என சிறப்பாக நடித்து உள்ளார் அசோக் செல்வன்.
படத்தின் இன்னொரு நாயகனான சாந்தனுவுக்கும் இது முக்கிய படம். ராவண கோட்டம் படத்துக்குப் பிறகு இன்னொருமொரு முத்திரை கதாபாத்திரம். சாதி ஆணவ த்தை வெளிப்படுத்தும்போதும் சரி, அதை தவறென உணர்ந்து நடந்துகொள்ளும்போதும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக வரும், கீர்த்தி பாண்டியன் துள்ளலான இளம்பெண்ணாக வருகிறார்.
பகவதி பெருமாள், பட்ஸ், லிசி ஆண்டனி, ரித்விராஜன் என அனைவருமே இயல்பாக நடித்து பராட்டைப் பெறுகிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் ரயிலின் ஒலிகள் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலம்.
சாதி மோதல் என்பதே தேவையற்ற ஆணி என்பதை, சொல்லும் விதத்தில் சிக்ஸர் அடித்து இருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார். வாழ்த்துகள்.