ரெட்ட தல: திரை விமர்சனம்

ரெட்ட தல: திரை விமர்சனம்

பி.டி.ஜி. யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்க, கிரிஷ் திருமுகுமார் இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் படம்.

சாம் சி.எஸ். இசையமைக்க, டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பாண்டிச்சேரியில் வாழும் ஏழை இளைஞன் காளி, கோவாவில் செயல்படும் கொடூர ஹிட்மேன், உபேந்திரா. இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல திட்டமிடுகிறார்கள். யார், யாரை கொன்றார்கள் என்பதும், பிறகு என்ன நடந்தது என்பதுமே கதை.

காளி, உபேந்திரா ஆகிய இரு வேடங்களிலும் அருண் விஜய் நடித்து இருக்கிறார். இதில் ஒரு அருண் விஜய் பதற்றமாகவும், மற்றொருவர் மிக அமைதியாகவும் இருப்பார். அந்த அமைதியான பாத்திரத்தின் கண்களில் தெரியும் ஒருவித ஏளனமான சிரிப்பும், சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் அசுர வேகமும் ‘டாப் க்ளாஸ்’.காதலியின் அதீத பணத்தாசை.. வேறு வழியின்றி அதற்கு உடன்படும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக உணர்வுகளை வெளிக்காட்டி இருக்கிறார் அருண் விஜய்.பிறகு அதிரடியாக திட்டமிடுவதாகட்டும், சண்டைக் காட்சிகளில் தூள்பறத்துவதாகட்டும் வழக்கம்போல் தான் முழுமையான ஹீரோ என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்து இருக்கிறார்.

நாயகி சித்தி இராணியும் சிறப்பாக நடித்து உள்ளார். வாழ்ககையில் எப்படியாவது செட்டில் ஆகிவிட வேண்டும் என துடிப்பது, பணம் சம்பாதிக்க காதலனை தூண்டிக்கொண்டே இருப்பது என ரசிக்க வைக்கிறார்.

தான்யா ரவிச்சந்திரனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் சிறப்பான கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

ஹரீஷ் பேரடி, வழக்கம் போல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். மகனது கொலைக்கு பழிக்குப் பழி வாங்க, “ஆபரேசன் பண்ணாம எத்தனை நாள் உயிரோடு இருப்பேன்” என கேட்டு படுக்கையில் இருந்து எழும் காட்சி அசத்தல்.இதர கதாபாத்திரத்தில் நடித்தவராகளும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

சாம் சி.எஸ். தனது பின்னணி இசையால், படத்தை இன்னும் ஒரு படி உயர்த்துகிறார். படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே அவரது இசை ஓடி வருகிறது.

டிஜோ டாமியின் ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறது.

அந்தோணியின் எடிட்டிங் கச்சிதம்.

ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களை சிறப்பாக அளித்து இருக்கிறார்கள்.இரட்டை வேடங்கள், நாயகியின் பணத்தாசை, அதிரடியாக களத்தில் இறங்கி சிக்கிக்கொள்ளும் நாயகன் என்று சுவாரஸ்யமான முடிச்சு. அதை கிளைமாகஸ் வரை சிறப்பாக கொண்டு சென்று ரசிக்க வைக்கிறார்கள்.

ரேட்டிங்: 3.8/5

 

 

Related Posts