இன்று: பாண்டே விழாவை புறக்கணிக்கும் நல்லகண்ணு!

தொலைக்காட்சி நெறியாளராக இருந்த பாண்டே, தற்போது சாணக்யா என்ற யு டியுப் சேனலை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், “சாணக்யா யு டியுப் சேனலின் முதலாம் ஆண்டு விழாவை” இன்று, சென்னையில் நடத்துகிறார்.

இதில், இல.கணேசன் (பா.ஜ.க.), குமரி அனந்தன் ( காங்கிரஸ்), நல்லகண்ணு (சி.பி.ஐ.) ஆகியோருக்கு சாணக்யா விருது வழங்குவதாக அறிவித்தார். மேலும்  இவர்களது கையால் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தினார். ( பாண்டே தேர்ந்தெடுத்த அந்த மூன்று நிறுவனங்கள் எவை என்று அறிவிக்கப்படவில்லை.)

விருது விழா அழைப்பிதழ்

இந்நிலையில், சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், தனது முகநூல் பக்கத்தில், “எண்பது ஆண்டுகளாக இலட்சிய உறுதியோடு வாழும் அய்யா நல்லகண்ணு அவர்கள், கொள்கை உறுதியோடு வாழும் இன்றைய தலைமுறையின் வழிகாட்டி. நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் அறிவித்துள்ள விருதினை அவர் ஏற்க மாட்டார். அதில் கலந்துகொள்ள மாட்டார். கொள்கையில் சமரசம் இல்லை” என்று பதிவிட்டார்.

சி.மகேந்திரன் முகநூல் பதிவு

இதையடுத்து, பாண்டே நடத்தும் விழாவை நல்லகண்ணு புறக்கணிப்பார் என்பது தெரியவருகிறது.

இது குறித்து சி.பி.ஐ. கட்சி வட்டாரத்தில், “பாண்டே, பத்திரிகையாளர், ஊடகவியலாளர் என அறியப்பட்டாலும், பா.ஜ.க.வை தீவிரமாக ஆதரிக்கும் வலதுசாரி சிந்தனையாளர். ஆகவே அவர் அளிக்கும் விருதை, பொதுவுடமைத் தோழரான நல்லகண்ணு பெறுவது  பொருத்தமாக இருக்காது!” என கூறப்படுகிறது.