ஜெயிலர் பார்த்துட்டு ரஜினி சொன்ன முதல் கமெண்ட்!
‘ஜெயிலர்’ பட சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் நெல்சன், “படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று நினைத்து இயக்கவில்லை. படம் நன்றாக வரவேண்டும் என நினைத்து எடுத்தோம். படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரை ஆளுமை. அவரது ரசிகர்களுக்கு நன்றி.
ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன்பு படத்தை ரஜினிக்கு போட்டு காட்டினேன். அப்போது அவரிடம், ‘நான் கதை சொல்லும்போது ஒரு விஷுவல் உங்கள் மனதுக்குள் தோன்றியிருக்குமே, அப்படியான ஒரு விஷுவலாக படம் இருக்கிறதா?’ என கேட்டேன்.
அதற்கு அவர், ‘நான் நினைத்ததை விட 10 மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது’ என கூறினார். இன்றைக்கு எனக்கு இருக்கும் நிறைவு அன்றே எனக்கு கிடைத்துவிட்டது.
நிறைய பேர் என்னை சந்தேகத்துடன் பார்த்தனர்.. படம் சரியாக வருமா என யோசித்தனர். இந்த நிலையில் படத்தின் ஆதாரப்புள்ளியாக இருக்கும் ரஜினி நம்பிக்கையுடன் எங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இமயமலை சென்றுவிட்டார். அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நெல்சன்.

