புதியவன் ராசைய்யாவின் ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப் படம் சிங்கள மொழியிலும் வெளியீடு!
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்தது ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம்.
ஈழப்போராட்டத்தில் பங்குபெற்று பிறகு பிரிட்டன் நாட்டில் அகதியாக குடியேறிய, புதியவன் ராசைய்யா இப்படத்தை தயாரித்து இயக்கியதோடு நடிக்கவும் செய்து இருந்தார்.
தனி மனிதர்களையோ, தலைவர்களையோ, இலங்கை அரசையோ, ராணுவத்தையோ அதீதமாக விமர்சிக்காமல் மௌன சாட்சியாகத் தனது நிலத்தின் தற்போதைய களநிலவரத்தின் ஒரு தரப்பைச் சுயவிமர்சனம் செய்யும் படமாக இதை உருவாக்கியிருந்தார்.
உலக அளவில் பல பன்னாட்டி திரைப்பட விழாவில் இப்படத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது.
படம் சொன்ன செய்தியோடு படம் உருவான விதமும் பாராட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியான போதும், கவனத்தை ஈர்த்தது இத்திரைப்படம்.
இந்நிலையில், இப்படம் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இப்படம் வெளியாகும் என புதியவன் ராசைய்யா அறிவித்து உள்ளார்.