பி.டி. சார் விமர்சனம்

பி.டி. சார் விமர்சனம்

ஆண்டாண்டு காலமாக, ஆண்களால் மகளிர்  அனுபவித்து வரும் பிரச்சினையை ஆண்கள் போக்க வேண்டும் என்கிற சீரிய கருத்துடன் வெளியாகி உள்ளது, பி.டி.சார்.

ஈரோடு பகுதியில் பள்ளி, கல்லூரிகளை நடத்தி செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறார் தியாகராஜன். இவரது பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகிறார், நாயகன் ஹிப் ஹாப் ஆதி.

ஏதாவது பிரச்சினை என்றால், காத தூரம் விலகி ஓடுபவர் ஆதி. இந்நிலையில், அவர் தனது தங்கையாக நினைக்கும் அனிகாவிற்கு கல்லூரி நிறுவனத்தில் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

அதுவரை பயந்த சுபாவமாக இருந்த ஆதி, வெகுண்டு எழுகிறார். ஊர் பெரிய மனிதரான தியாகராஜனை எதிர்த்து களம் இறங்குகிறார்.தியாகராஜன் தண்டிக்கப்பட்டாரா, அனிகாவுக்கு நியாயம் கிடைத்ததா என்பதே படத்தின் மீதி கதை.

நாயகன் ஆதி சிறப்பாக நடித்து இருக்கிறார். தனக்கு காதல் போட்டியாக வரும் சிறுவனிடம் காட்டும் செல்லக் கோபம், அம்மாவிடம் காட்டும் அன்பு, அநீதிகளைக் கண்டு ஆரம்பத்தில் பயந்து ஒதுங்குவது, அனிகாவுக்கு பிரச்சினை என்றவுடன் வெகுண்டு எழுவது என கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.

நாயகி காஷ்மீரா, பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். வேண்டுமென்றே நாயகன் ஆதியை சீண்டுவது, அநீதிக்கு எதிராக ஆதி போராடும்போது துணை நிற்பது என வலுவான பாத்திரம். 

சமுதாயத்தில் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்ணாக சிறப்பாக நடித்து உள்ளார் அனிகா. அதுவும் கல்லூரி தாளாளர் தவறாக நடக்க முயற்சிக்கும் இடத்தில் நிலைகுலைந்து நிற்கும் காட்சியை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

வில்லனாக வரும் தியாகராஜன். நிஜ ‘கல்வித்தந்தையை’ கண்முன் நிறுத்துகிறார். மிரட்டல்.

இளவரசு மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பு அற்புதம். அதுவும் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என்பதை நம்ப மறுத்து புலம்பும் காட்சியில் நெகிழ வைக்கிறார் இளவரசு.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பலம்.  குறிப்பாக அச்சமில்லை அச்சமில்லை என்ற இசை, அற்புதம்.

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஓகே ரகம்.

குழந்தை பருவத்தில் இருந்தே ஆண்களால் பெண்கள் படும்பாட்டை சொன்ன விதத்தில் பாராட்டு பெறுகிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.

சமூக அக்கறையோடு உருவாகி உள்ள பி.டி. சார் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.