“2000 கோடி வசூலிக்கும் கங்குவா!”: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நம்பிக்கை!

‘கங்குவா’ திரைப்படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்து உள்ளார்.
பான் இந்தியா என்ற பெயரில் பிற மொழி இந்திய படங்களான பாகுபலி, கே.ஜி.எஃப், ஆர்ஆர்ஆர், ஜவான், பதான் போன்றவை ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டி உள்ளன. ‘தமிழ் திரைப்படம் எதுவும் இந்த அளவுக்கு வசூலை எட்டுவதில்லையே’ என தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக, ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நாயகனாக நடிக்க, சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படம், ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்க, வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் உருவாகியுள்ளது. இது 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட இருக்கிறது.
14 ஆம் நூற்றாண்டை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் 20 சதவீதம் வரலாற்றையும் 80 சதவீதம் கற்பனையும் அடிப்படையாக கொண்டு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. பண்டைய காலகட்ட நடைமுறைகளான இறைவழிபாடுகள், கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கங்குவா என்பதற்கு நெருப்பில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம்.இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “500 கோடி, 700 கோடி என எவ்வளவு வசூல் செய்தாலும் அதன் ஜி.எஸ்.டி சான்றிதழை ட்வீட் செய்கிறேன். அதன் மூலம் உண்மையான வசூல் என்ன என்பது தெரிந்துவிடும். அதே போல் அடுத்துள்ள தயாரிப்பாளர்களிடமும் கேட்டீர்கள் என்றால் உண்மையான வசூல் தெரிந்துவிடும். கங்குவா படத்தைப் பொறுத்தவரை, ஆயிரம் கோடியை அல்ல.. ரூ.2000 கோடி வசூல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.