திரைவிமர்சனம்:பெருசு : துவளுதா, துடிக்குதா?

திரைவிமர்சனம்:பெருசு : துவளுதா, துடிக்குதா?

கிராமத்தில் மதிப்பும் மரியாதையுமாக வாழும் முதியவர், பெருசு என்கிற ஹாலாஸ்யம். ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும் அவர், திடுமென இறந்து விடுகிறார். ஆனால் அவரது உடலை “மதிப்பும் மரியாதையுமாக” அடக்கம் செய்ய முடியாத நிலை, குடும்பத்தினருக்கு. அவர் இறந்த துக்கத்தைவிட, அவரை எப்படி ஊரார் கண்ணிலிருந்து “பிரச்சினையை” மறைத்து இறுதிக்காரியம் செய்வது என திட்டமிடுகிறார்கள்.

பெரியவரின் தம்பி, இளையமகன், மூத்த மகனின் நண்பன், காதலி, பாதிக்கப்பட்ட சிறுவன் ஆகியோரால் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இதையெல்லாம் மீறி, “மரியாதை கெடாமல்” பெரியவர் அடக்கம் செய்யப்பட்டாரா என்பதே மீதிக்கதை.

மூத்த மகனாக வரும் சுனில் வழக்கம் போல் இயல்பாக நடித்து இருக்கிறார். விவகாரத்தை தீர்க்க பொறுப்புடன் செயல்படுவது, அப்பாவுடன் இறுதிக்காலத்தில் நன்றாக பேசி பழகி இருக்கலாம் என வருந்துவது என்று சிறப்பாக நடித்து உள்ளார்.

இளைய மகனாக வரும் வைபம், குடிகாரராக வாழ்ந்திருக்கிறார். அவசரப்பட்டு ஏதாவது உளறி, பிறகு சமாளித்து சிரிக்க வைக்கிறார்.

பெரியவரின் தம்பியாக வரும் முனீஷ்காந்த், தனது போலீஸ் மூளையுடன் துப்பறிய முயல்வதும் அதில் தோல்வி அடைந்து புலம்புவதுமாக ரசிக்க வைக்கிறார்.

பக்கத்து வீட்டில் நடப்பதை நோட்டம் பார்ப்பதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் ரமா, எடக்கு மடக்காக பேசும் ஆட்டோ டிரைவர் கிங்ஸ்லி, நண்பனாக வரும் பால சரவணன், நிஹாரிகா, சாந்தினி, தனம், தீபா என அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.

விடிவி கணேஷ், கருணாகரன், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோரும் கொஞ்ச நேரமே வந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள்.

பெரியவரின் நண்பராக வரும் சுவாமிநாதனும் தன் பங்குக்கு ஈர்க்கிறார்.அருண்ராஜின் பின்னணி இசை, சத்யா திலகத்தின் ஒளிப்பதிவு, சூரிய குமரகுருவின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.

“அப்பா தலை நிமிர்ந்து வாழ்ந்தருடா” என்று அம்மா புலம்ப, “தலை மட்டும் நிமிர்ந்தா பரவாயில்லை” என்று மகன் கவுண்ட்டர் கொடுப்பது…

“பால்ய காதலி” என்று சித்தப்பா சொல்ல, “பாலியல் காதலியா” என பால சரவணன் கலாய்ப்பது..

“ஆன்மிகத்துல இறங்கிடலாம்னு பார்க்கிறேன்” என்று நண்பன் சொல்ல, “குடிச்சுட்டு பைக்லேருந்து இறங்கவே தடுமாறுவியேடா..” என்று வைபவ் கிண்டலடிப்பது…

– இப்படி வசன காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.

படம் துவங்கிய சற்று நேரத்திலேயே கதைக்குள் நுழையும் திரைக்கதை, வார்த்தை ஜால காமெடி,
ஆரம்ப காட்சியிலே நேராகக் கதைக்குள் செல்லும் திரைக்கதை, வார்த்தை ஜால காமெடி வசனங்கள் என ரசிக்க வைக்கிறார் இயக்குநர் இளங்கோ ராம்.‘பாயின்ட்’, ‘மேட்டர்’ என்று அடிக்கடி வரும் டபுள் மீனிங் வசனங்கள் உறுத்துகின்றன. அட, படமே உறுத்தல் கதைதானே.

தந்தைக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை, பெருமையாக மகன் பேசுவது, பள்ளி ஆசிரியையை தரம் தாழ்ந்து குறிப்பிடும் வசனம் என நீக்க வேண்டிய காட்சிகளும் நிறைய உள்ளன.

Related Posts