“கலைஞரைவிட வேகமானவரு ஸ்டாலின்! ‘பெரியார்’ படத்த ரீ ரிலீஸ் பண்ணுங்க!”: ‘PERIYAR VISION’ ஓடிடி விழாவில் சத்யராஜ்!

“கலைஞரைவிட வேகமானவரு ஸ்டாலின்! ‘பெரியார்’ படத்த ரீ ரிலீஸ் பண்ணுங்க!”: ‘PERIYAR VISION’ ஓடிடி  விழாவில் சத்யராஜ்!

” பெரியார் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும்” என ‘PERIYAR VISION’ ஓடிடி அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

திராவிடகொள்கையை,  இன்றைய தலைமுறையினரும் அறியும் வகையில்,  ‘PERIYAR VISION – Everything for Everyone’ எனும் ஓடிடி செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இம்முயற்சியை, திராவிடர் கழகம் செய்து உள்ளது.

இது,  சமூக நீதிக்காக உலகின் முதல் ஓ.டி.டி. தளமாகும்.  இந்த தளத்தில் சமூக நீதியை  அடிப்படியைகக்  திரைப்படங்களை, குறும்படங்களை வெளியிடப்படும்.

இதற்கான துவக்க விழா  சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில், தி.க.  தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, திராவிட கழக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அருள்மொழி,  திக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி காணொலிமூலம் ஒளிபரப்பப்பட்டது.

( ” ‘PERIYAR VISION’ ஓடிடி காலத்தின் தேவை!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!)

நிகழ்வில் பேசிய நடிகர் சத்யராஜ், “தற்போது ஓடிடி தளம்  முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

கலைஞர் வசனம் எழுதுன ‘பராசக்தி’ படத்திலேயே சென்சார் பிரச்சினை வந்தது. வசனங்கள நீக்கினாங்க. எம்.ஜி.ஆர். படங்கள்ல பாடல் வரிகளுக்கும் தடை போட்டாங்க. ‘அன்பே வா’ படத்தில, ‘உதய சூரியன் பார்வையிலே..’ அப்படிங்கிற பாடல் வரிக்கு அனுமதி தர மறுத்தாங்க. அதனால  ‘புதிய சூரியனின்.’  என்று மாத்தவேண்டியதா போச்சு. ‘பெற்றால்தான் பிள்ளையா’ பட பாட்டுல, ‘அண்ணா’ங்கிற என்கிற வார்த்தை சென்சார் போர்டு நீக்குச்சு.

இப்படி திராவிட இயக்க வசனங்களை, பாடல்  வரிகளை எல்லாம் நீக்கினாங்க.

இதனால மக்களுக்குக் கோபம் வந்து,  தி.மு.க.வுக்கு பத்து ஓட்டுகள போட வேண்டிய சூழல்ல நூறு ஓட்டுகள போட்டு ஜெயிக்க வச்சாங்க. நான்  இளைஞனா  இருக்கும்போது இதையெல்லாம்  பாத்திருக்கேன்.

அன்னையிலருந்து இப்போ வரை சென்சார் பிரச்னை தொடருது. நான் இப்போ நடிச்சிருக்கிற,  ‘தோழர் சேகுவேரா’ படத்திலயும் இதே பிரச்சினைதான்.

ஆனா ஓடிடி-யில  பிரச்னை குறைவு. ஏன்னா,   ஓடிடிக்கு ரெகுலேசன்தான்.. சென்சார் இல்லை.

அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்தோட  படைப்பாளிகளால பயன்படுத்த முடியுது.

இந்த ‘PERIYAR VISION’  ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம எடுத்துச் செல்லணும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது ரொம்ப அவசியம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “நான் பெரியாராக நடித்த ‘பெரியார்’ திரைப்படத்தை டிஜிட்டலாக மேம்படுத்தி இருக்கிறதா, தோழர் பிரின்ஸ் சொன்னாரு.   அந்தப் படத்தை இன்றைய காலகட்டத்தில் வெளியிட்டால் நல்லா இருக்கும்.

‘பெரியார்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடும்போது பிரச்னைக வரும், திரையரங்கு முன்பு கலாட்டா நடக்கும், கலவரங்கள் வெடிக்கும், திரையிடவிடமாட்டாங்க என்றெல்லாம் மிரட்டல்கள் வந்துச்சு. ஆனா, அப்போ கலைஞர் ஆட்சியில் இருந்ததால கலவரக்காரங்க பயந்துட்டாங்க.

இன்னைக்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினின் ஆட்சி நடக்குது.  கலைஞரைவிட வேகமானவர் ஸ்டாலின். இப்போ ‘பெரியார்’ படத்தைத் திரையிட்டால் நல்லா  இருக்கும் ” என்று சத்யராஜ் தனது ஆவலை வெளிப்படுத்தினார்.

Related Posts