ஏப்ரல் 30: திரையரங்குகளை அதிரவைக்க வரும் ராம் சரணின் ‘பெத்தி’ திருவிழா!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இப்போது ஒரு புது அவதாரத்தில் மிரட்ட வருகிறார். புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ திரைப்படம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையுமே ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. மார்ச் 27-ம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம், இப்போது கோடை விடுமுறையைக் குறிவைத்து ஏப்ரல் 30-ம் தேதிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் கலந்த ஒரு மிரட்டலான அனுபவத்தை கொடுக்க படக்குழு தயாராகிவிட்டது. வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் விருத்தி சினிமாஸ் இணைந்து இந்தப் பிரம்மாண்டத்தை உருவாக்கியுள்ளனர்.
சமீபத்தில் வெளியான போஸ்டரில் ராம் சரணைப் பார்த்தால் அடையாளம் தெரியாத அளவுக்கு மிரட்டலாக இருக்கிறார். கலைந்த நீண்ட முடி, அடர்த்தியான தாடி, மூக்கில் ஒரு வளையம் என அவரது லுக் ‘மாஸ்’ ரகம். புகை மண்டலத்திற்கு நடுவே கோபமான முகபாவனையோடு அவர் நடந்து வரும் காட்சி, ஒரு பெரிய போராட்டத்தை திரையில் காட்டப்போவதை உறுதி செய்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான “சிக்கிரி சிக்கிரி” பாடல் ஏற்கனவே 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர் ஜோடி சேர, சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் பொமன் இரானி என நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ளது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், அவிநாஷ் கொல்லாவின் கலை இயக்கமும் படத்திற்கு ஒரு தனி உலகத்தையே உருவாக்கியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான்-இந்தியா அளவில் வெளியாகவிருக்கும் ‘பெத்தி’, இந்த கோடை விடுமுறையில் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

