“பவன் கல்யாண் ஒரு மன நோயாளி!”: சூர்யா சேவியர் அதிரடி!
நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடிக்கும் பான் இண்டியா திரைப்படமான ஹரிஹர வீரமல்லு என்கிற திரைப்படம் இன்று இந்தியா முழுதும் வெளியாகிறது. தமிழ்நாட்டிலும் தமிழில் வெளியாகிறது.
ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
இந்தப் படம் உருவாகும்போதே, “முகலாய அரசர்கள் பற்றி இழிவாகவும், சிவாஜி குறித்து அதீத உயர்வாகவும் கற்பனை கலந்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும்” என்று விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், “முகலாய மனனர்கள் அக்பர் குறித்து உயர்வாக பேசுகிறோம், ஆக்கிரமிப்பாளரான பாபரை மகிமைப்டுத்துகிறோம். ஆனால், விஜய நகர பேரரசு பற்றி ஏன் எதுவும் சொல்லப்படவில்லை.. சத்ரபதி சிவாஜி தமிழ்நாட்டில் கோவில்களை காப்பாற்றிய வரலாறு ஏன் பாடப்புத்தகத்தில் இடம் பெறவில்லை… இந்தியர் அனைவரும் இந்த உண்மையை அறிய வேண்டும்..” என்று பேசினார்.
இது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் சூர்யா சேவியர் தனது முகநூல் பக்கத்தில், பவன் கல்யாண் பேச்சு குறித்து பதிவிட்டு உள்ளார்.
அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது..
பவன் கல்யாண் எனும் மனநோயாளியின் கவனத்திற்கு!
தஞ்சையை ஆண்ட தனது தம்பி ஏகோஜியைப் போட்டுத்தள்ள சிவாஜி தமிழ்நாடு வந்தார் என்பது தான் வரலாறு.
மலோஜிராவோ போஸ்லே என்பவரும், இஸ்லாமிய சூபி சன்யாசி ஷாஷரீப்பும் நண்பர்கள். நண்பனின் உதவியால் வாழ்ந்த மலோஜிராவோ, தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு, அவரின் நினைவாக ஷாஜி-ஷரீப்ஜி என்று பெயரிடுகிறார்.
பிஜப்பூர் சுல்தானிடம் ஷாஜி படைத்தலைவராக பணியாற்றி நற்பெயர் எடுக்கிறார். எனவே பிஜப்பூர் சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சிறு பகுதியை ஜாகீ்ராக (பொறுப்பாக) ஷாஜிக்கு தருகிறார் பிஜப்பூர் சுல்தான். அப்பகுதியே பெங்களூர்.
பெங்களூர் ஜாகீரை நிர்வகித்த ஷாஜிக்கு துர்க்காபாய்-ஜிஜாபாய் என்று இரண்டு மனைவிகள். துர்க்காபாயின் மகன் ஏகோஜி. ஜிஜாபாயின் மகன் சிவாஜி.
தந்தைக்கு பிறகு பிஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராக இருக்கிறார் ஏகோஜி.
மதுரை நாயக்கர்களுக்கும்-தஞ்சை நாயக்கர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில், தஞ்சை நாயக்கருக்கு ஆதரவாக பிஜப்பூர் சுல்தானால் படைகளோடு அனுப்பி வைக்கப்பட்டவர் ஏகோஜி.
தஞ்சை நாயக்கரோடு சேர்ந்து மதுரை நாயக்கரைத் தோற்கடித்துவிட்டு, தஞ்சை நாயக்கரையும் கொன்றுவிட்டு, தஞ்சையில் மராட்டிய ஆட்சியை 1674 ல் ஏற்படுத்துகிறார் ஏகோஜி.
இதே காலத்தில் பிஜப்பூர் சுல்தானோடு மோதுகிறார் சிவாஜி. பிஜப்பூர் சுல்தானின் சில பகுதிகளைக் கைப்பற்றி 1674 ல் மன்னராகிறார்.
சிவாஜிக்கு ஏழு மனைவிகள்.
1.சயீ பாய்
2.சோயரா பாய்
3.புத்தளி பாய்
4.காசி பாய்
5.சுகுணா பாய்
6.சக்கர்வார் பாய்
7.குண்வந்தி பாய்
தனது ஆட்சியை நீடிக்க சிவாஜிக்குப் பணம் தேவைப்படுகிறது. எனவே தமிழ்நாட்டின் மீது 30,000 குதிரைவீரர்கள், 20,000 காலாட்படையுடன் போர் தொடுக்கிறார் சிவாஜி. வேலூர், செஞ்சி கோட்டைகளைக் கைப்பற்றுகிறார்.
அடுத்து கடலூருக்கு அருகில் திருவதிகை எனும் ஊரில் அரசாண்ட ஷெர்கான் லோடியை தோற்கடித்து அப்பகுதியைக் கைப்பற்றுகிறார்.
தனது தம்பி ஏகோஜி ஆட்சி செய்யும் பகுதியில் ஒரு பகுதி வருமானத்தைக் கேட்டு கொள்ளிடம் நதிக்கரையில் திருமழப்பாடி அருகே முகாம் அமைத்து தூது அனுப்புகிறார். ஏகோஜி தர மறுக்கிறார். தம்பி ஏகோஜியோடு யுத்தம் நடத்துகிறார். இறுதியில் கொள்ளிடம் வடபகுதியைக் கைப்பற்றுகிறார். ரகுநாத் பந்த் என்பவரை அப்பகுதிக்கு பொறுப்பாக்குகிறார்.
பிறகு ஏகோஜி மனைவியின் சமாதான முயற்சியால் சிவாஜி வெற்றி பெற்ற பகுதிகளை ஏகோஜிக்கே விட்டுக் கொடுக்கிறார். 1674 முதல் 1680 வரை ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆண்ட சிவாஜி 1680 ல் மரணமடைகிறார்.
வேலூர், செஞ்சி, கடலூர், திருமழப்பாடி ஆகிய இடங்களுக்கு சிவாஜி வந்த வரலாற்று ஆவணங்கள் இருக்கிறது. சிவாஜி சென்னை வரவும் இல்லை. காளிகாம்பாளை வழிபடவும் இல்லை. அதற்கான வரலாற்று ஆவணங்களும் இல்லை. எந்தக் கோவிலையும் காக்கவும் இல்லை. காக்க வேண்டிய தேவையும் தமிழ்நாட்டில் இல்லை.
நடேசனார் என்பவர் சுதேசிமித்திரனில் எழுதிய டுபாக்கூர் கதையே சிவாஜி சென்னை வந்தார் என்ற கதை. அப்படியே வந்தாலும் அவர் நோக்கம் தமிழகத்தை கொள்ளையடிப்பதும், தனது தம்பி ஏகோஜியை போட்டுத் தள்ளுவதுமே.
தஞ்சை-மதுரையை ஆண்ட நாயக்கர்களைக் கொன்று குவித்த, மராட்டியர்களைப் பற்றி பேசுவோமா பவன் கல்யாண்?
ஏகோஜியின் வாரிசு துக்கோஜியால் பழிவாங்கப்பட்ட இராமநாதபுரம் சேதுபதி வரலாறையும் பேசுவோமா பவன் கல்யாண்?
- சூர்யா சேவியர்
22-07-25 - ( இவர்கள் சொல்லும் இதுபோன்ற பொய் வரலாறுகளை ஆதாரங்களோடு மறுப்பதற்காக மட்டுமே எழுதியது தான் எனது #காவிரிநீரோவியம்.)
– இவ்வாறு தனது பதிவில் சூர்யா சேவியர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த ஹரிஹரவீரமல்லு திரைப்படம் குறித்து ஏற்கெனவே கடந்த, மார்ச் 19ம் தேதி tamilankural.com இணைய இதழில் வெளியிட்ட கட்டுரை..
கலவரத்தைத் தூண்டும் ஹரிஹர வீரமல்லு?
அதே போல கடந்த ஜனவரி 19ம் தேதி tamilankural.com வெளியிட்ட கட்டுரை..
ஹரி ஹர வீரமல்லு’ சர்ச்சை : பவன் படத்தில் அவுரங்கசீப் வில்லன்?

