‘பரமசிவன் – பாத்திமா’: பம்பாய் போல மதம் கடந்த காதலைச் சொல்லும் திரைப்படம்!
‘பரமசிவன் பாத்திமா’ எனற புதிய படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார் இசக்கி கார்வண்ணன்.
இவர் ஏற்கெனவே சேரன் நடிப்பில் ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை இயக்கியவர்.
சார் படத்தில் ஜோடியாக நடித்த விமல் – சாயாதேவி இப்படத்திலம் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார்.
படம் குறித்து படக்குழு, “மலைக் கிராமத்தில் வசிக்கும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு, மதங்களால் எப்படிப்பட்ட பாதிப்பு வருகின்றன என்பதை பாசாங்கு இன்றி சொல்கிறது படம். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தது.
1995ல் மணிரத்னம் இயக்கி அரவிந்த்சாமி – மணிசா கொய்ராலா ஜோடியாக நடித்த பம்பாய் திரைப்படம் வெளியானது. இதில், சேகர் என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும், சைலா பானு கதாபாத்திரத்தில் மனிசா கொய்ராலாவும் நடித்தனர்.
அதுபோல மதம் கடந்த காதலைச் சொல்லும் திரைப்படமாக ‘பரமசிவன் – பாத்திமா’ உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.