படிக்காத பக்கங்கள் விமர்சனம்

காதலனை நம்பி ஒரு பெண் ( தர்ஷினி) நெருக்கமாக இருக்க, அது இன்னொருவன் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அவளுக்கே வருகிறது . அவன் பணம் கேட்பதோடு பலரிடம் உறவுகொள்ள நிர்ப்பந்திக்கிறான். அந்தப் பெண் நியாயம் கேட்க, அடித்துக் கொல்லப்படுகிறாள்.
நடிகை ஸ்ரீஜா ( யாஷிகா ஆனந்த்) ஒரு படப்பிடிப்புக்காக ஏற்காடு செல்கிறார். அவரை பேட்டி காண வரும் செய்தியாளர் (முத்துக்குமார்) முறைகேடாக நடக்க முயல்கிறார். அவரிடம் இணங்குவது போல நடிக்கும் நடிகை ஸ்ரீஜா அவரை அடித்து வீழ்த்துகிறார்.
அப்போது ஸ்ரீஜா, “நீ என்ன குறி வச்சு வரல.. நான்தான் உன்னை வர வைத்தேன்” என்கிறார்.
அது ஏன் என்பதைச் சொல்கிறது மீதிக்கதை.
யாஷிகா ஆனந்த் சிறப்பாக நடித்து உள்ளார். தான் அவமானப்படும்போது ஆக்ரோசம் கொள்வது, தங்கையை நினைத்து கலங்குவது, கொடூரர்களை பழிவாங்கும்போது ஆவேசப்படுவது என சிறப்பாக நடித்து உள்ளார்.
கவர்ச்சியிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் இயல்பாக நடித்து உள்ளார்.
சைக்கோ வில்லன் முத்துக்குமரன் மிரட்டி இருக்கிறார். தன்ஷிகா உள்ளிட்டோரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஜெஸ்ஸி கிப்ட்டின் பின்னனணி இசை சிறப்பு. டாலியின் ஒளிப்பதிவு, மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகத்தின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.
பெண்களை ஏமாற்றி, பாலியல் ரீதியாக பயன்படுத்தும் அயோக்கியர்களைப் பற்றிய கதை. பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதத்தின் பாதிப்பில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் செல்வம் மாதப்பன்.