ஒரு நொடி விமர்சனம்

ஒரு நொடி விமர்சனம்

ஒரு நொடியில் ஏற்படும் எதிர்பாரா விபரீதம், மனித வாழ்வில் எந்த மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தி விடுகின்றது என்பதை, சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லராக சொல்லி இருக்கிறார்கள்.

மதுரையில் எம்.எஸ். பாஸ்கர் சிறிய போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.  மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்காக வேல ராமமூர்த்தியிடம் தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்குகிறார்.

பணத்தை தயார் செய்து  திரும்ப கொடுக்கப் போகும் நேரத்தில் காணாமல் போகிறார். இதையடுத்து எம்.எஸ். பாஸ்கரின் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த வழக்கை இன்ஸ்பெக்டரான தமன்குமார் விசாரிக்கிறார்.

இந்த நிலையில், அதே ஏரியாவில் இளம் பெண் நிகிதா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

இந்த இரண்டு வழக்குகளையும் இன்ஸ்பெக்டர் தமன்குமார் விசாரிக்க.. அடுத்தடுத்து திடுக் திருப்பங்கள்.

எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போனது எப்படி, நிகிதாவை கொலை செய்தது யார் என்று எதிர்பாராத திருப்பமாக கிளைமாக்ஸில் சொல்கிறார்கள். உண்மையில் ஆடித்தான் போகிறோம்.

 

காவல் அதிகாரியாக வரும் தமன் குமார் சிறப்பாக நடித்து உள்ளார். சொல்லப்போனால், நிஜ போலீஸ் இன்ஸ்பெக்டரை கண் முன் நிறுத்துகிறார். நடை உடையில் மிடுக்கு, கம்பீரமான குரல் என அசத்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் எப்போதும்போல் இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். பெண் திருமணத்துக்காக கடன் வாங்கி, திரும்பச் செலுத்த சிரமப்படும் நடுத்தர குடும்பத் தலைவராகவே வாழ்ந்திருக்கிறார். கஜராஜூம் இயல்பான நடிப்பு.

நிகிதா, தயாரிப்பாளர் அழகர், ஸ்ரீரஞ்சினி, அருண் கார்த்திக், கருப்பு நம்பியார் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

வேல ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர் ஆகியோர் எப்போதும்போல் ஒரு மீட்டருக்கு மேலே நடித்து இருக்கிறார்கள்.

சலூன் கடைக்காரராக வரும் விக்னேஷ் ஆதித்யா  கவனத்தை ஈர்க்கிறார்.

சஞ்சய் மாணிக்கத்தின் இசை படத்துக்கு பலம். ஜெகன் கவிராஜ், சிவசங்கர், உதயா ஆகியோரின் பாடல் வரிகள் காட்சிகளுக்குப் பொறுத்தமாக துணை நிற்கின்றன.கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு, சிறப்பு.

படம் ஆரம்பத்ததில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை, சாகசங்கள் இன்றி இயல்பான காட்சி அமைப்புகள்,  தொடரும் ட்விஸ்டுகள் – அவற்றை சரியாக இடத்தில் ஒன்றிணைத்து இருப்பது,  பாடல்கள் பெரிய அளவில் கதையை பாதிக்காத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது,  ஒவ்வொருவரும் ஒரு பிளாஷ்பேக் கதையை சொன்னாலும் அதை சரியாக மெயின் கதையோடு இணைத்து இருப்பது என இயக்குநர் பி. மணிவர்மன்  ரசிக்க வைக்கிறார்.

ஆபாசம், வன்முறை இல்லாத.. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படம், ஒரு நொடி.

Related Posts