ஒன்பது ரூபாய் நோட்டு: இந்தியாவில் இப்படி ஓர் படம் வந்ததில்லை!

எந்தெந்த படங்களோ, எப்போதோ வந்த நாட்களை இப்போது கொண்டாடுகிறார்கள். உண்மையில் நினைவு வைத்து இன்று கொண்டாட வேண்டிய திரைப்படம், தங்கபச்சான் இயக்கத்தில் சத்யராஜ், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படம்.
2007ம் ஆண்டு இதே நவம்பர் 30ம் தேதி வெளியானது.
பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட ஒரு சம்சாரியின் கதை.
அரிதாய் திரையில் தென்படும் வட தமிழ்நாட்டின் முந்திரிக் காடு, பலாத் தோப்புதான் கதைக் களம்.
பெருஞ் செல்வமும், அதைவிட பெரிய மனசும் கொண்ட மாதவ படையாச்சிதான் கதை நாயகர். அத்தனை பேரின் மீதும் அன்பு செலுத்தும் அவர், கேட்டவருக்கெல்லாம் வாரிக் கொடுக்கிறார். இது அவரது வாரிசுகளுக்குப் பிடிக்கவில்லை. வம்படியாக, சொத்தைப் பிரித்துக் கேட்கிறார்கள்.
வீராப்புடன் கொடுத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறுகிறார் மனைவியுடன்.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் ( அவரது வாழ்க்கைக்) கதை!
இந்த ஒன்பது ரூபாய் நோட்டுக்காக சத்யராஜூக்கு கோடி கோடியாய் கொடுத்தாலும் நிறையாது!இளமைத் ‘திமிரில்’, ‘அதெப்படி நீயா சின்னவன்தான் கடைசிப் பையன்னு முடிவு பண்ணலாம்!’ என்று மனைவியிடம் செல்லமாக முரண்டு பிடிப்பதாகட்டும்… பட்டியில் கிடக்கும் ஆடுகள் கத்தினாலே உயிர் உடைந்து போகிற மனுசன், நடு ராத்திரியில் எழுந்து ‘பசிக்குது’ என்று அழும் பேரனை பார்த்து கையறு நிலையில் மருகுவதாகட்டும்.. வாழ்ந்திருப்பார் மனிதர்!
ஊரைவிட்டுச் சென்றவர் மீண்டும் திரும்புகையில், நீள உடலை மண்ணில கிடத்தி விழும் காட்சி இன்னும் மனக்கண்ணில் ஈரம் காயாமல் இருக்கிறது. பலா மரங்களை நேசத்துடன் அவர் தடவுத்தரும் காட்சியும்தான்!
சத்யராஜின் மனைவி வேலாயியாக வரும் அர்ச்சனா மட்டும் என்ன… வட தமிழ்நாட்டின் கிராமத்து தமிழச்சியை கண் முன் நிறுத்தி இருப்பார்.
நண்பராக வரும் நாசரும் அற்புத நடிப்பு!
தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் இயக்கமும் வாழ்வியலை நேர்கொண்டு நிறுத்தின.
பரத்வாஜின் இசையிலும் முந்திரி வாசம் வீசும். அப்படியோர் இசை.
தங்கர்பச்சான் தனது மனதில் பல வருடங்கள் அசை போட்டு, புதினமாக எழுதி அதன் பிறகு வருடங்கள் கழித்து திரைப்படமாக உருவானது இது.
அவரே கூறியபடி, தமிழ் மரபின் குடும்ப உறவுகள், உழவுக் குடும்பத்தின் சிக்கல்கள், சினிமாத்தனமற்ற உரையாடல்கள் என அனைத்தும் கொண்ட மண் சார்ந்த படைப்பு தான் ஒன்பது ரூபாய் நோட்டு.
தங்கர் பச்சான் ஒருமுறை, “எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும்” என்றார்.
ஆனால் அது ஒன்பது ரூபாய் நோட்டு என்கிற அற்புத திரைப்படத்துக்கு நடக்கவில்லை என்பதுதான் பெருஞ்சோகம்.
இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
ஆம்.. கட்டணம் ஏதுமின்றி திரையரங்கில் படம் பார்க்கலாம். திரும்பும்போது தங்களுக்கு விருப்பமான தொகையை அங்கிருக்கும் உண்டியலில் செலுத்தலாம்!
இது ஆச்சரியமாகவும் ஏன்.. சாதனையாகவும்கூட தெரியலாம்!
ஆனால் இதன் பின் இருப்பது வேதனை!
இந்த சிறந்த படத்தை வெளியிட திரையரங்குகள் கிடைக்காத நிலை. அதனாலேயே இந்த புதிய முயற்சி!
ஆனால் இதற்காக வருத்தப்பட வேண்டியது தங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அல்ல. வணிக சூதாட்டத்தில் சிக்கி இருக்கும் தமிழ்த் திரையுலகம்தான்!
இன்று, தங்கர்பச்சான் தனது முகநூல் பக்கத்தில், ” “ஒன்பது ரூபாய் நோட்டு” நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் மனங்களில் என்றும் வாழும் இப்படைப்பு எனது படைப்புகளிலேயே வாழ்க்கைக்கு மிக நெருக்கமான படைப்பாக கருதுகிறேன்” என்று வெளியிட்ட பதிவைப் பார்த்தேன்.
உண்மைதான்!
நாம் இன்னொன்றும் செய்யலாம்.
தற்போது இந்த படம் யு டியுபில் காணக்கிடைக்கிறது. படம் பார்த்துவிட்டு, நாம் விரும்பும் தொகையை தயாரிப்பாளர் மருத்துவர் கணேசன் அவர்களுக்கு அனுப்பலாம் என்று தோன்றுகிறது.!
நெகிழ்வுடன்,
டி.வி.சோமு