“கேலி செய்த சமூகம்..!’: மகள் நடிகைக்கு நெகிழ்ச்சி கடிதம் எழுதிய இயக்குநர் அப்பா!
ஆகச் சிறந்த இயக்குநர் ஒருவர்… தேசிய விருது பெற்றவர்… தனது மகளின் நடிப்பை நெகிழ்ந்து பாராட்டி உள்ளார்.
அவர்.. அகத்தியன்.
ஆம்… கோகுலத்தில் சீதா, விடுகதை, காதல் கோட்டை உள்ளிட்ட அற்புத படங்களை அளித்தவர். இவற்றில் காதல் கோட்டை படத்துக்காக தேசிய விருது பெற்றவர்.
அகத்தியன் -ராதா தம்பதிக்கு விஜயலட்சுமி, நிரஞ்சனா, கனி (கார்த்திகா) என மூன்று மகள்கள்! மூவருமே திரையுலகில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகின்றனர்.
இவர்களில் கனி என்கிற கார்த்திகா நடித்துள்ள, பாராசூட் என்கிற வெப் சீரிஸ், டிஸ்னி + ஹாட் ஸ்டால் ஓ.டிடி.யில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது.
நடிகர் கிருஷ்ணா குலசேகரனின் ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட்தயாரிக்க, ஸ்ரீதர் கே-வின் கதை வசனம் எழுத ராசு ரஞ்சித் இயக்கி உள்ளார். யவன் சங்கர் ராஜாவின் இசை அமைக்க, ஓம் நாராயணின் ஒளிப்பதி செய்து இருக்கிறார்.
காணாமல் போன அப்பாவின் இரு சக்கரத்தைத் தேடி புறப்படும் இரு சிறுவர்களின் பயணமே கதை. ஃபீல் குட் த்ரில்லராக வெளியாகி உள்ள இந்த வெப் சீரிஸ் பார்ப்போரை கவர்ந்து இழுக்கிறது.
இதில் கிசோர், கனி (கிருத்திகா), கிருஷ்ணா குலசேகரன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். அதிலும், இரு குழந்தைகளுக்கு அம்மாவாக – கணவனுக்கு பயந்து நடுங்கும் மனவியாக வரும் கனி ( கிருத்திகா), நிஜமான குடும்பத்தலைவியை கண் முன் நிறுத்துகிறார்.
இந்நிலையில் அவரது அப்பா, இயக்குநர் அகத்தியன், தனது முகநூல் பக்கத்தில் கனிக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதம்:
“அன்பு மகள் கனி என்னும் கார்த்திகாவுக்கு.
வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு என்றால் உன் விஷயத்தில் அது ஆச்சரியங்களின் தொகுப்பு. யாருமற்றவனாய் உன்னை கைகளில் ஏந்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். நம்மைக் கேலி செய்த அந்த சமூகத்தை திரும்பிப்பார்க்கிறேன்.
ஆம். .. உனது நடிப்புலகப் பிரவேசம் என்னை பின்னோக்கி அழைத்துபோய் காட்டுகிறது.
இனிய மகளே… ஒரு இயக்குனராக நான் உன்னைப் பார்த்தால், நீ ஆச்சரியமூட்டும் ஒரு நடிகையாக மாறிவிட்டாய்.
ஒரு அப்பாவாக, ‘அட என் கனி ‘ என்று மனது கிள்ளிக்கொள்கிறது. என் கண்களை என்னாலயே நம்ப முடியவில்லை.
உன் வாழ்நாளில் இதை, இந்த தொடரை நீ ஒரு மைல்கல்லாகவே எடுத்துக்கொள்ளலாம். பாராசூட் பத்திரமாக உன்னைத் தரையிறக்கியிருக்கிறது. இன்னும் இனி நீ தரையிறங்காமல் பறக்க வாழ்த்துகள்.
உருவாக்கத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். Disney HotStar ல் உன் இணய காணொலி தொடர் வெற்றி பெற வாழ்த்துகள்.
இப்படி ஒரு நடிப்பு அமைவது வரம். ஆசீர்வாதம். நீ ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறாய். அதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு. வாழ்த்துகள் மகளே!” – இவ்வாறு அகத்தியன் குறிப்பிட்டு உள்ளார்.
மகள் தந்தைக்காற்றும் உதவி!
-டி.வி.சோமு