பாராசூட்: வெப் தொடர்: ஃபீல் குட் த்ரில்லர்!

பாராசூட்: வெப் தொடர்: ஃபீல் குட் த்ரில்லர்!

ஆச்சரியம்தான்.. ஃபீல்குட் மூவியாக ஒரு சுவாரஸ்யமான த்ரில்லரை அளித்திருக்கிறார்கள்.

முதலில் இதைத் தயாரித்த நடிகர் கிருஷ்ணா குலசேகரனின் ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், ஸ்ட்ரீமிங் செய்துள்ள டிஸ்னி ஃ ஹாட் ஸ்டார் இரு நிறுவனங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

கேஸ் சிலிண்டர்கள் போடும் தொழிலாளி சண்முகம். அவர் மனைவி கனி. சண்முகம் தன் சக்திக்கு மீறி செலவு செய்து, பெரிய பள்ளியில் தனது மகன், மகள் இருவரையும் படிக்க வைக்கிறார்.

சிறுவர்களான இந்த அண்ணன் – தங்கை இருவரும் பாசமானவர்கள். அதே நேரம், அண்ணனுக்கு அப்பா என்றால் பயம். காரணம், சிறு குறும்பு செய்தாலும், மார்க் குறைவாக வாங்கினாலும் போட்டுத் தாக்கிவிடுவார்.

ஒரு நாள் அப்பாவின் இரு சக்கரத்தை நைசாக எடுத்துக்கொண்டு, தங்கையை அமரவைத்து ஓட்டிக்கொண்டு கிளம்புகிறான் சிறுவன். இடையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்ப வந்து பார்த்தால் காணவில்லை.வண்டி இல்லாமல் வீட்டுக்குச் சென்றால் அப்பா கடுமையாக அடிப்பார் என்று தேடிச் செல்கிறார்கள். அது ஒரு நீண்ட த்ரிலிங் பயணமாகி விடுகிறது.

இங்கே அப்பாவும் அம்மாவும் அவர்களைக் காணாமல் போலீசில் புகார் அளிக்கிறார்கள்.

இன்னொரு புறம், வி.ஐ.பி. ஒருவரின் மகன், போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்ட.. அந்த வண்டியை சீஸ செய்துவிடுகிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி. அந்த வண்டியை சம்பந்தப்பட்டவரிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடுகிறார் உயர் அதிகாரி. ஆனால் சீஸ் செய்த வண்டியை காணவில்லை.இந்த இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்கிறது.

குழந்தைகள் கிடைத்தார்களா, வண்டி கிடைத்ததா… என்பதுதான் மீதிக்கதை.

குடும்பத்துக்காக அதீதமாக உழைக்கும் எப்போதும் உர் என்று இருக்கும், அப்பாவாக கிசோர். டக் என ஆத்திரப்படும் படபட கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் கிசோர்.அம்மாவாக வரும் கனியும் அற்புத நடிப்பு. கணவரை நினைத்து பதறும் காட்சிகளே போதும், அவரது நடிப்பைச் சொல்ல.

காவல் அதிகாரியாக வரும் கிருஷ்ணா குற்றவாளிகளிடம் அதிரடி காட்டுவது, குழந்தைகள் மீதான அன்பால் தேடுவது என கம்பீரத்தையும் கனிவையும் கலந்து கொடுத்து அசத்துகிறார்.இயல் என்கிற கதாபாத்திரத்தில் வரும் சிறுமி ருத்ராவும், சக்தி என்ற கதாபாத்திரத்தில் வரும் சிறுவனும் சிறப்பாக நடித்து உள்ளனர். இருவருக்கிடையேயான பாசக் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.

பக்கத்து வீட்டுக்காரராக வரும் காளி வெங்கட், அவரது மனைவியாக வரும் சரண்யா ராமச்சந்திரன் இருவரும் இயல்பாக நடித்து உள்ளனர்.

பெரியவராக வரும் பவா செல்லதுரைதான், பாத்திரத்துக்குப் பொருந்தவில்லை. செயற்கையான நடிப்பு.

ஸ்ரீதர் கே-வின் கதை வசனம் ஈர்க்கிறது. யவன் சங்கர் ராஜாவின் இசையும், ஓம் நாராயணின் ஒளிப்பதிவும் கதாபாத்திரங்களாவே பயணிக்கின்றன. காட்டில் சிறுவர்கள் செல்லும் நேரம், இறுதி கலவரக் காட்சிகளில் கேமராவும், இசையும் சேர்ந்து புது அனுபவத்தை அளித்து இருக்கின்றன.ரெமியனின் கலை இயக்கம், டேஞ்சர் மணியின் சண்டைக் காட்சிகள் படத்துக்கு பலம். ரிச்சர்ட் கெவினின் எடிட்டிங் கச்சிதம்.

ராசு ரஞ்சித் சிறப்பாக இயக்கி உள்ளார்.

இரண்டு சிறார்களின் உலகத்தைச் சொல்வதன் மூலம் பெரியவர்களக்கு பாடம் எடுத்து இருக்கிறது, இந்த வெப் சீரிஸ்.

அற்புதம்!

  • டி.வி.சோமு

Related Posts