“ஓ.பி.எஸ். இதை செய்யணும்!”: மன்சூர் அதிர்ச்சி கோரிக்கை!

“ஓ.பி.எஸ். இதை செய்யணும்!”: மன்சூர் அதிர்ச்சி கோரிக்கை!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும்,  நடிகர் மன்சூர் அலிகானும் ஓரே புள்ளியில் இணைந்து இருக்கின்றனர்.

ஆச்சரியமாக இருக்கிறதா?

உண்மைதான். படியுங்கள் புரியும்.

அதிமுக-வின் ஒற்றைத் தலைமை  ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.  ஒரு கட்டத்தில் உட்கட்சி பிரச்சினையில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பொதுச் செயலாளராக தானே முடிசூடிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

மீண்டும் அதிமுகவில் சேர மிகவும் முயற்சி செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.  மோதலில் தொடங்கி, சட்டப் போராட்டங்கள் வரை அனைத்தையும் கடந்து வந்தார். கட்சியில் மட்டும் சேர முடியவில்லை. பிறகு, “அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு” என உருவாக்கினார். அப்படியும் மீண்டும் அதிமுகவில் சேர முயற்சி செய்தார். நடக்கவில்லை.

இந்த நிலையில் தனது, “அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு”வை, அனைத்து இந்திய அண்ணா திராவிட  தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என கட்சியாக உருவாக்கி உள்ளார்.உலக அளவில் மிகப்பெரிய கட்சி பெயர் இதுதான். 36 எழுத்துக்கள்!!!

இந்த சாதனையை  செய்துவிட்டு வழக்கம்போல் அமைதி மோடு முகபாவத்திலேயே வலம் வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆனால் அவரது சாதனையை மதித்து இந்த கட்டுரையை எழுதினேன். இன்னும் மதிப்பை அளிக்க வேண்டும் என யோசித்தேன்.

நடிகர் மன்சூர் அலிகான்தான் நினைவுக்கு வந்தார்.

காரணம் இருக்கிறது.

1993ல், உலகிலேயே மிகப்பெரிய தலைப்பு கொண்ட படத்தில் நடித்தார்.பெயர்: ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்ட!!   42 எழுத்துகள்!!!

மன்சூர் நாயகனாக தோன்ற,  நந்தினி நாயகியாக நடித்தார். நெப்போலியன், நாகேஷ், ஜெய்கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ். எஸ். சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றினர்.  இந்தப் படத்துக்கு மன்சூர் அலிகானே இசை அமைத்தார் என்பது ஆச்சரிய தகவல். ( நன்றி: விக்கிப்பீடியா!)

ஆக..  ஓ.பி.எஸ், உலகிலேயே மிக நீளமான கட்சிப் பெயரை வைத்தும், மன்சூர் அலிகான் திரைப்படத்துக்கு நீளமான பெயர் வைத்தும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.

ஆகவே நடிகர் மன்சூர் அலிகானை தொடர்புகொண்டேன். அவரிடம், “ஓ.பன்னீர் செல்வம், தனது கட்சிக்கு மிக நீளமான பெயர் வைச்சிருக்காரே.. நீங்க என்ன நினைக்கிறீங்க” என்றேன்.

ஆச்சரியமான விசயம்.. தனது சாதனையை மன்சூரே மறந்துவிட்டு, “என்கிட்ட ஏன் கேக்குறீங்க..” என்றார்.

நான், “உலகிலேயே மிக நீளமான படத்தலைப்பு வைத்தவர் நீங்கள்தான். இப்போது கட்சிப் பெயரை அப்படி வைத்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதனால்தான் உங்களது கருத்தை அறிய தொடர்புகொண்டேன்” என்றேன்.

“ஓ… அவரு கட்சிப் பெயரை மறுபடி சொல்லுங்க..” என்றார்.

நான் சொன்ன அடுத்த வினாடி, “இன்னும் கொஞ்சம் நீளமா வச்சிருக்கலாம்!” என்றார் மன்சூர்.

எனக்குத்தான் திடுக் என்று இருந்தது. மன்சூர் வழக்கம்போலவே இயல்பாக, “என்ன.. நான் சொன்னது சரிதானே” என்றார்.

“நீங்க சொன்னா சரியாத்தானே இருக்கும்.. நன்றி” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

மன்சூர் அலிகான் வெறும் நடிகர் மட்டுமல்ல.. பல போராட்டங்களை நடத்திய அரசியல்வாதி.தனியாக தமிழ்த் தேசியப் புலிகள் என்றும், பிறகு, இந்திய ஜனநாயகப் புலிகள் என்றும் கட்சிகள் நடத்தினார்.

பெரிய தலைப்பு வைத்து படம் எடுத்த அவரே, தனது கட்சிக்கு அப்படி நீளமாக வைக்கவில்லை. அந்த சாதனையை இன்னொருவர் – ஓ.பன்னீர் செல்வம் – செய்திருக்கிறார். ஆனாலும் மன்சூர் பொறாமைப்படாமல், “இன்னும் நீளமா வச்சிருக்கலாம்” என்று கூறியது அவரது  பெருந்தன்மை.

அவரது கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் பரிசீலிப்பார் என நம்புவோம்.

– டி.வி.சோமு

 

Related Posts