பெ.மகேந்திரனின் ‘நிறைகுளம்’: வினைத்தொகை!: நூல் விமர்சனம்: அருண்குமார்

பெ.மகேந்திரனின் ‘நிறைகுளம்’: வினைத்தொகை!: நூல் விமர்சனம்: அருண்குமார்

சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையில் “தில்லை வாழ் அந்தணர்”  என்று ஒரு தொடர் வரும். இத்தொடரை இலக்கண விதிப்படி பார்த்தால்  தில்லையில் வாழ்ந்த அந்தணர், தில்லையில் வாழ்கின்ற அந்தணர், தில்லையில்
வாழும் அந்தணர் என்று அமையும்.

அதேபோல, நிறைகுளம் என்ற பெயர்ச்சொல்லையும் நோக்கினால்,  நிறைந்த குளம், நிறைகின்ற குளம், நிறையும் குளம் என்று அமையும்.

இந்நாவல் எம்மாதிரியான உணரச்சியை வெளிப்படுத்தகிறது என்று பார்த்தால்  சோகம், நகைச்சுவை இரண்டையும் மாறி மாறி தந்துவிட்டுச் செல்கிறது.

நூலாசிரியர் ஒரு உத்தியைக் கையாண்டுள்ளார். தொட்டவுடன் சோகமே  ஒருவருக்கு தென்பட்டால் அது சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து தொடக்கத்தில் நகைச்சுவையைக் கொண்டு வந்து புகுத்தியுள்ளார். இது
வாசிப்போரை நூலின் கவனத்துள் ஈர்த்துவிடுகிறது. (உதா.) ஏர்க்கலப்பையை  சுமந்து செல்லும் சாத்துரப்பனிடம் வாத்தியார் கேட்கும் கேள்வி. பக்.11

உணர்ச்சிகளை எழுத்துக்குள் கொண்டு வரலாம். ஆனால் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை எழுத்துக்குள் கொண்டு வருவது சிரமம்தான்.

ஆனால் அதை எழுத்துக்குள் புகுத்தியுள்ளார் நூலாசிரியர்.

“ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழ்ழ்…..ழாம்”(பக்.21)என்று அந்த வியாபாரி கூவுவதை நாம் எழுத்தாக வாசிக்கும் போது நாமும் அந்த வியாபாரியாகவே மாறிவிடுகிறோம்.

நாவலின் இடையே வரும் கிளைக்கதைகள் நாவலை மேலும் மெருகேற்றி விடுகின்றன. முக்கிய கதைமாந்தர்களாக சாத்தூரப்பன், ஆதிமூலம்,ராமகிருஷ்ணன் மூவரும் நாவலின் இறுதிவரை பயணித்து வருகின்றனர்.இந்நாவலில் எளியோன் எளிதில் கடவுளைத் தொடர்பு கொள்வது போல ஆதிமூலத்தை அமைத்திருக்கிறார். பிள்ளையார் கிடங்கில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரே கதி என்று இருக்கிறார் ஆதிமூலம். ஓர் உறவாகவே
பிள்ளையாரை நினைத்துக் கொண்டார். அவருடைய பக்தி அபரிமிதமானதாக இருந்தது.

பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் கரிசல் பூமியில் வாழும் மக்களின் மனதும் நொருங்கிக் கிடக்கிறது. மேற்கே ஓர் அணை கட்டினால் அதன் மூலம் கரிசல் பூமி எவ்வளவு தூரம் பரந்து விரிந்திருக்கிறதோ அதுவரை எங்கும்
பச்சைப்பசேல் என்று நிறைந்திருக்கும். ஆங்கிலேயர் ஆட்சியில் அணை கட்டுவதற்கு வரைவு செய்யப்பட்டதோடு சரி. இன்று வரை அணை கட்டப்படவில்லை. அழகர் அணைத்திட்டம் என்பதே கரிசல் பூமியில் வாழும் எனக்கு இந்நாவலை வாசித்தபிறகே தெரிகிறது என்றால் மக்கள் மனதில் இருந்து அத்திட்டத்தின் கனவை ஆட்சியாளர்கள் எங்கோ கொண்டு போய்விட்டனர் என்று தெரிகிறது.

தனுஷ்கோடியில் இருந்து வந்த ஆதிமூலம் தனக்கு சோறு போட்டு வளர்த்த கிராமத்தை செய்நன்றி மறவாது இருப்பதை உடையும் நிலையில் இருந்த கண்மாயை காப்பாற்றிய போது அறிய முடிகிறது.

அருண்குமார்

சோகமும், நகைச்சுவையும் கலந்தது என்று முன்னர் கூறியது போல, நெல்லை வட்டாரங்களில சக்கரத்திற்கு பைதா என்று பெயர். அதை மனிதர்களின் பெயர்களுக்கு சூட்டி பார்த்தபோது, சக்கரபாண்டி – பைதாபாண்டி, சக்கரபாணி – பைதாபாணி என்றெல்லாம் மனதில் தோன்றியது.

மழை பொய்த்த வறட்சியின் காரணமாக மக்கள் வேறு தொழிலை நாடியுள்ளனர். அது இப்போது அப்பட்டமாகத் தெரிகிறது. சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற ஊர்களில் தொழிற்சாலைகள் வருகையால் சுற்றியுள்ள
கிராமத்து மக்கள விவசாயத்தை நினைக்காது பட்டாசு, தீப்பெட்டி, அச்சகத்தொழில் போன்ற தொழில்களை நாடிச் சென்றுள்ளனர்.

விவசாயமே கதி என்றிருக்கும் சம்சாரிகள் தான் விவசாயம் செய்கின்றனர். கரிசல் மக்களின் இருப்பிடம் மட்டும்தான் வீடே தவிர, அவர்களின் வாழ்விடம் என்பது கரிசல்காடுதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கரிசலின் ஆன்மா விவசாயம்தான். அந்த ஆன்மாவை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் இந்த சம்சாரிகளே. அதற்குத்
துணைபுரிவது மழைதான். மழை பொய்த்துவிட்டால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். மழை பொய்த்தாலும் பரவாயில்லை “நிறைகுளம்” என்று பலகையில் எழுதியிருந்த ஊர்ப்பெயரை வாசிக்கும்போது முன்பு சொன்னதுதான்
“நிறைந்தகுளம்”, நிறைகின்றகுளம்”, “நிறையும்குளம்”. நிறைவாகச் சொன்ன “நிறையும்குளம்” என்ற சொல்லையே சம்சாரிகள் நினைவில் வைத்துள்ளனர்.

  • அருண்குமார் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பெ.மகேந்திரன் அவர்களின் நிறைகுளம், வெள்ளாமை ஆகிய நாவல்களைப் பெற…

வெள்ளாமை – கௌரா பதிப்பகம் ( 97907 06549)

நிறைகுளம்- மின்னங்காடி பதிப்பகம்  ( 78240 49160)

Related Posts