“பகுத்தறிவு பலே பாண்டியா”!: சூரியை பாராட்டும் வைரமுத்து!
சூரி கதை மற்றும் நடிப்பில் நேற்று வெளியான, மாமன் திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்று உள்ளது. இந்தநிலையில், படம் வெற்றி அடைய அவரது ரசிகர்கள் சிலர் மதுரையில் மண் சோறு திண்றனர். இதை சூரி கடுமையாகக் கண்டித்தார். இதையடுத்து சூரியை சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் பாராட்டினர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் சூரியை பாராட்டி உள்ளார்.
அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு உள்ளதாவது…
” திரைக்கலைஞர்
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்
தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்
மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது
இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று சொல்வதற்குத்
துணிச்சல் வேண்டும்
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்
தங்கள் ரசிகர் கூட்டத்தை
இப்படி நெறிப்படுத்தி
வைத்திருந்தால்
கலையும் கலாசாரமும்
மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்
மண்சோறு தின்றால் ஓடாது
மக்களுக்குப் பிடித்தால்
மாமன் ஓடும்
பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை
‘பலே பாண்டியா’
என்று பாராட்டுகிறேன்” என்று வைரமுத்து குறிப்பிட்டு உள்ளார்.

