‘திரை நாயகன்’ ஆகிறார், ‘மக்கள் தொடர்பு நாயகன்’ நிகில்!
பிரபல நடிகர்கள் மற்றும் திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக விளங்கும், நிகில் முருகன், முதன் முறையாக திரையில் நாயகனாக தோன்றுகிறார்.
.
சிடி, லேப்டாப், டிஜி பென், டாக்குமெண்ட் ஸ்கேனர் மற்றும் சிடி ரைட்டருன் ஒரு நடமாடும் அலுவலகமாக மாறியவர் இவர். தொடர்ந்து நவீன வசதிகளை முதன் முறையாக செயல்படுத்துவதில் இப்போதும் முன்னணியில் உள்ளவர்.
இவருக்கு, ‘தொடர்பு நாயகன்’ எனப் பட்டம் சூட்டி கவுரவித்தது, பிரபல பத்திரிகையான இந்தியா டுடே.
தற்போது முதன் முறையாக, திரையிலும் நாயகனாக தோன்றுகிறார் நிகில் முருகன்.
விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘பவுடர்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா, வையாபுரி,ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இது குறித்து இயக்குனர் விஜய் ஸ்ரீ கூறுகையில், “25 ஆண்டு காலமாக சிறந்த பி.ஆர்.ஓ. என பெயரெடுத்து வருபவர் நிகில் முருகன். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அவரை, லாக் டவுன் நேரத்தில் நான் பயன்படுத்திக் கொண்டேன். முதலில் நடிக்க மறுத்த அவரை, வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்தேன்.
படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ராகவன். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் சூட்டிக்கொண்டதால் வலிமை பெற்ற அந்தப் பெயரை நிகில் முருகனுக்கு வைத்துள்ளேன்.
எதிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர் நிகில் முருகன். நடிக்க சம்மதித்த நாள் முதலே நடிப்பு பயிற்சி, உடற்பயிற்சி என தன்னை தகுதிப்படுத்தி கொண்டார். உடலை கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் வலிமையாக்கி திரையில் சிறப்பாக பொருந்தி இருக்கிறார்.
அவரது குரல் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு ப்ளஸ் என்றே சொல்வேன். நிகில் முருகன் பங்குபெறும் காட்சிகள் பெரும்பாலனவை, தீவிர லாக்டவுனுக்குப் பின்னர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியபோதே முடித்துவிட்டோம். நாயகி வித்யா பிரதீப்புடனான காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டும்!” என்றார் விஜய்ஸ்ரீ.
“நிகில்” என்றால் முழுமையானவர் என்று அர்த்தம். அதன்படி எந்தவொரு செயலிலும் முழுமையான ஈடுபாடு செலுத்தி வெற்றி பெறும் நிகில், நாயகனாகவும் முழு வெற்றி பெறுவார். அவருக்கு நமது தமிழன் குரல் டாட் காம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்!