அடுத்தடுத்த படங்களும் இணையத்தில்தான் வெளியாகுமா?: ஜோதிகா பதில்
ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் (நேரடியாக இணையத்தில்) வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இப்படி நேரடியாக இணையத்தில் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது அடுத்தடுத்த படங்களும், நேரடியாக இணையத்தில் வெளியாகுமா என்பது குறித்து ஜோதிகா கூறியுள்ளதாவது:
“இப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள் தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். திரையரங்கில் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும். இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பும் நன்மையோ அதை தான் கவனிக்க முடியும். கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள் – இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். ஓடிடி ப்ளாட்பார்ம் என்பது கதையை மையம் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன். பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். அதில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.
சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஹீரோ படத்தோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறையப் பேர் செல்ல மாட்டார்கள். வழக்கமான என் படங்களுக்கான ரசிகர்களை விட, இப்போது அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும். என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்த தீர்வு அவ்வளவே. கரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்கள் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை எந்த இடைவெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சினை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம்.”
– இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.