‘நீளிரா’: ஈழப்போர் பின்னணியில் விடியா இரவின் தீரா திகில்! !

‘நீளிரா’: ஈழப்போர் பின்னணியில் விடியா இரவின் தீரா திகில்!   !

லங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஒரு திருமணத்திற்காகப் போராடும் மனிதர்களின் வாழ்வியலை ‘சர்வைவல் த்ரில்லராக’ சொல்ல வருகிறது ‘நீளிரா’. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஏப்ரல் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் அரங்கேறியது.

இயக்குநர் சோமீதரன்: “எங்கள் வீட்டு சமையல் தியேட்டரில்!”

“சிறு வயதில் போர் மேகங்களுக்கு நடுவே தமிழகத் திரைப்படங்களைப் பார்த்தபோது, என்றாவது ஒருநாள் எங்கள் ஊர் காட்சிகளும், எங்கள் மொழியும் திரையில் ஒலிக்காதா என்ற ஏக்கம் இருந்தது. அது இன்று சாத்தியமாகியுள்ளது. இது வெறும் ‘ஆர்ட் ஃபிலிம்’ அல்ல; கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த போர் கால வாழ்க்கை. குண்டு விழும் இடத்திலும் ஒரு பிறந்தநாளோ, திருமணமோ நடக்கத்தான் செய்யும். அந்த மரண பயத்திற்கு நடுவே நடக்கும் ஒரு நீண்ட இரவின் கதை இது. ஈழத்து வீடுகளையும், அங்கிருக்கும் ‘குசினி’யையும் (சமையலறை) எந்த சமரசமும் இன்றி இதில் காட்டியிருக்கிறேன்.”

நடிகை ரூபா கொடுவாயூர்: “எமோஷனல் போர்!”

“போர் என்றால் ஆயுதங்கள் மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் எதிர்கொள்ளும் எமோஷனல் போராட்டத்தைப் பேசுகிறது இந்தப் படம். ஒரு நீண்ட இரவில் நடக்கும் சம்பவங்கள் உங்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அர்த்தமுள்ள படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி.”இசையமைப்பாளர் கே: “மறக்க முடியாத படைப்பு”

“இப்படியொரு அழுத்தமான கதையில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘நீளிரா’ ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.”

நடிகர் சனந்த்: “புதிய வாழ்வியல்”

“சென்னையிலேயே வளர்ந்த எனக்கு ஈழத்து வாழ்வியல் முற்றிலும் புதியது. இயக்குநர் காட்டிய ஆவணப்படங்கள் மூலம் அந்த மக்களின் வலியைப் புரிந்து நடித்தேன். இன்னும் இது போன்ற பல கதைகள் திரைக்கு வர வேண்டும்.”

நாயகன் நவீன் சந்திரா: “ஸ்டோன் பெஞ்ச் என் குடும்பம்”

“இந்தப் படத்தில் நான் ஒரு ‘கேப்டன்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அஸ்ஸாம், மும்பை எனப் பல மாநில கலைஞர்களுடன் பணியாற்றியது புதுமையாக இருந்தது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதைத் தேர்வு வியக்க வைக்கிறது. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் எப்போதுமே சமத்துவத்தையும், தரமான சினிமாவையும் போற்றுவது சிறப்பு.”

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம்: “காலரைத் தூக்கி விட்டுக்கொள்வோம்!”

“நீளிரா எங்களின் 18-வது தயாரிப்பு. இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக நாங்கள் பெருமிதத்தோடு காலரைத் தூக்கி விட்டுக்கொள்வோம். கார்த்திக் சுப்புராஜ் காட்டிய ஒரு நிமிடக் குறும்படம்தான் என்னை இந்தத் திசையில் சிந்திக்க வைத்தது. இயக்குநர் சோமீதரன் மிகக் குறுகிய காலத்தில், தரமான ஒரு படைப்பை உருவாக்கியுள்ளார். குறிப்பாக கே-வின் இசை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.”இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: “சினிமா ஆயுதத்தை விட வலிமையானது”

“நான் தயாரிக்கும் படங்களில் முதல்முறையாக என் பெயரும் ‘தயாரிப்பாளர்’ வரிசையில் இருக்க வேண்டும் என்று விரும்பி கேட்ட படம் இது. என் முதல் குறும்படமான ‘காட்சிப் பிழை’யிலேயே ஈழத்துத் தாக்கம் இருந்தது. போர் என்பது வெறும் துப்பாக்கிச் சத்தம் மட்டுமல்ல, அதற்கு நடுவில் வாழும் மக்களின் எம்பதி (Empathy). வசூலைத் தாண்டிச் சில உண்மைக் கதைகளைச் சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தப் படம் ஒரு பக்கா சர்வைவல் த்ரில்லராக உங்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும்.”

ஏப்ரல் 3 முதல் தியேட்டர்களில் ‘நீளிரா’வின் போர்க்காலத் திருமணம் அரங்கேறுகிறது!

Related Posts