நாளை நமதே: திரை விமர்சனம்

நாளை நமதே: திரை விமர்சனம்

சாதி என்பது எவ்வளவு இழிவானது என்பதை உணர்த்த வந்திருக்கும்- வந்துகொண்டு கொண்டு இருக்கும் – இன்னும் வர வேண்டி இருக்கும் படங்களில் ஒன்று.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவதானுபுரம் என்கிற சிறிய ஊர். உள்ளாட்சித் தேர்தல் நெருங்குகிறது. அதிகமாக வசிக்கும் ஆதிக்க சாதியில் இருந்து இருவர், பஞ்சாயத்து போர்டு தலைவராக விரும்புகின்றனர்.

இந்த நிலையில், அந்த சிவதானுபுரம் பஞ்சாயத்து தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஏழு லட்சம் பணம் கட்டி, பதவியை ஏலத்தில் எடுக்கிறார் ஒரு ஆதிக்க சாதிக்காரர். அதாவது அவர் நிறுத்தும் பட்டியல் இனத்தவர் வேட்பாளராக போட்டியிடுவார். அவர் வென்ற பிறகு இவரே பஞ்சாயத்து தலைவராக செயல்படுவார். இதுதான் திட்டம்.அப்படி, தன்னிடம் வேலை பார்க்கும் பண்ணை தொழிலாளி ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரையே வேட்பு மனு தாக்கலும் செய்ய வைக்கிறார். இந்த நேரத்தில், அந்த தொழிலாளியின் மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்கிறார். காரணம், “குறிப்பிட்ட சாதிக்கு அடிமையாக ஏன் போட்டியிட வேண்டும்.. சட்டப்படி தேர்தலை சந்திப்போம்” என்பதே அவரது எண்ணம்.

அவர், “நான் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பது என் விருப்பம் இல்ல.. குறைந்த பட்சம் என் ஓட்டையாவது எனக்குப் போடணும்” என்கிறார்.

அவரைக் கொல்ல திட்டம் தீட்டுகிறது எதிர் தரப்பு… அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

ஒட்டுமொத்த படத்தையும் தூணாக தாங்குகிறார் நாயகி மதுமிதா. சாதீய அநீதியைக் கண்டு பொங்குவது, அதே நேரம் சாதி பார்க்காமல் அனைவருக்கும் சேவை செய்வது, முறை மாப்பிள்ளையிடம் சமூக நீதி குறித்து ஆவேச வகுப்பு எடுப்பது என்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதே போல அவர் மாமனார் கதாபாத்திரத்தில் – டம்மி வேட்பாளராக – வரும் முருகேசன், நடிப்பில் அசத்தி இருக்கிறார். சாதி ஆதிக்கவாதிகளுக்கு அடி பணிந்து நிற்பது, ஒரு கட்டத்தில் மருமகளிடம் உணர்ச்சிபூர்வமாக பேசுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இவரது மனைவியாக வருபவர், நாயகியின் தாயாக வருபவர் உள்ளிட்ட பலர் அற்புதமான நடிப்பை அளித்துள்ளனர்.

வில்லனாக வரும் ராஜலிங்கம், காமெடி என ஏதோ செய்யும் வேல்முருகன் உள்ளிட்டோர் மிகை நடிப்பு.

பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினரால் பட்டியல் இன மக்கள் அடையும் வேதனையையும், அவமானங்களையும் அப்பட்டமாகச் சொல்லி இருக்கிறது நாளை நமதே. இது போன்ற படங்கள் பல வந்திருக்கின்றன. இன்னும் வரவேண்டிய சூழலில்தான் நமது சமுதாயம் இருக்கிறது.

திரைப்படம் என்பது வலிமையான ஊடகம். இதன் மூலமாக நல்லமாற்றங்கள் நடக்க வேண்டும்.

இயக்குநர் வெண்பா கதிரேசனுக்கு பாராட்டுகள்.