கொலை! : திரையங்கில் 100 சத இருக்கைகள் பயன்பாடு! வைரலாகும் மருத்துவரின் பதிவு!
கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலகை சேர்ந்த அரவிந்த்சாமி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் முகநூல் பதிவு, பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர், தன் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு.
நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள் சோர்வாக உள்ளனர். காவல்துறை அதிகாரிகள் சோர்வாக இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.
இந்த, கொரோனா தொற்று காலத்தில், பாதிப்பு குறைந்த அளவில் இருக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்திக்கொள்வதற்காக இதைச் சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும்.

சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.
கொரோனாவின் வேகம் இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி!
இல்லை, இல்லை… கொலை!
சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை. அவர்கள், உயிருக்கு, பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த தொற்று பரவலில் இருந்து வெற்றிகரமான மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்!” என்று மருத்துவர் அரவிந்த், தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன், “மருத்துவர்களுக்கு திரைத்துறை என்ன நியாயம் சொல்லப் போகிறது? பணத்துக்காக உயிரை வியாபாரம் செய்வதா? அரசு போக்குவரத்து செய்லபடுகிறது, மக்களுக்கு பிரச்சனை இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. தியேட்டர்களில் ஏன் 50 சதவீத பார்வையாளர்கள் இருக்கக் கூடாது? மக்களின் நலன் முக்கியம் இல்லையா?
திரைத்துறை தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் பெரிய ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைக்கட்டும். தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்துவதை நிறுத்துங்கள். அப்படி செய்தால் சினிமா துறை செயல்படும், 50 சதவீத பார்வையாளர்களை வைத்தே தேவையான வருமானமும் வரும்!” என்று தெரிவித்துள்ளார்.