சினிமா விமர்சனம்: ‘அதோமுகம்’

சினிமா விமர்சனம்: ‘அதோமுகம்’

எதிர்பார்க்கவே முடியாத அதிரடி திடுக் திருப்பங்களை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம், ‘அதோமுகம்.’

மார்ட்டீன், ஒரு ‘மனைவி ப்ரியர்’. அதாவது தனது மனைவி மீது  காதலைப் பொழிபவன்.   மனைவிக்குத் தெரியாமல், அவளை தெரியாமலேயே கண்காணித்து, நேரம் பார்த்து, திடீர் கிப்ட் கொடுத்து அசத்த நினைக்கிறான். இதற்காக அவளது மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்கிறான். இதனால் அவளது போன் கால்கள், நடவடிக்கை அனைத்தும் இவனது நேரடி பார்வைக்கு வருகின்றன.. அவளுக்குத் தெரியாமலேயே.

ஆனால், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தவனுக்கு பல துன்ப அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதாவது, மனைவியின் அலைபேசும் நபர்கள், சந்திக்கும் ஆட்கள் எல்லாம் பல சந்தேகங்களை கிளப்புகின்றன.

அதன் பிறகு நடப்பதெல்லாம் அதிர்ச்சிகரமான திருப்பங்கள்.அந்த இளைஞனின் மனைவி உண்மையில் யார்.. அவள் விவகாரமான விசயங்களில் ஈடுபட காரணம் என்ன என்பதே மீதிக்கதை.

நாயகனாக எஸ் பி சித்தார்த் நடித்து உள்ளார்.  தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பது, பிரச்சினை என்றதும் நண்பனிடம் உதவி கேட்டு கெஞ்சுவது என இயல்பாக நடித்து உள்ளார்.

கணவனை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுப்பவர், கண நேரத்தில் கோணத்தை மாற்றி இன்னொருவனை கொல்லும் காட்சியில் உறைய வைக்கிறார்.

அதே போல இறுதிக்காட்சியில், தன்னைப் பற்றி கணவனிடம் கெத்தாக விவரிக்கும் காட்சியிலும் அசத்துகிறார்.

சிறைக் கைதியாக சில நிமிடங்கள் வருகிறார் அருண் பாண்டியன். அடுத்த பாகத்தில் இவருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை கோடிட்டு காட்டி இருக்கிறார்கள்.

அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் என மற்ற நடிகர்களும் இயல்பாக நடித்து உள்ளனர்.

அருண் விஜய்குமாரின் ஒளிப்பதிவு, ஒரு க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற அசத்தல்! அதோடு, மலை, காடு, பனிப்பொழிவு  என அழைகையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது.சரண் ராகவனின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

விஷ்ணு விஜயனின் படத்தொகுப்பு, திரைக்கதையின் படபடப்பை அதிகரிக்கிறது.

எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுனில் தேவ்.

மொபைல் போன்களின் ஆபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.