சின்னத்திரை இயக்குநர் சங்க முன்னாள் தலைவர் தளபதி மீது ரூ.60 லட்சம் மோசடி புகார்!
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எட்வர்ட் ராஜ் என்ற தளபதி, சங்கப் பணத்தில் 60 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கையாடல் செய்ததாக, சங்க நிர்வாகிகள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்து உள்ளனர்.
இது குறித்து சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தினர் அளித்துள்ள புகாரில். “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் புதிய தேர்தல் நடைபெற்று இயக்குநர் மங்கை அரிராஜன் தலைமையில் 15 பேர் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
இதற்கு முன் பொறுப்பு வகித்த தலைவர் தளபதி என்கிற எட்வர்ட் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், கணக்கு வழக்குளை கேட்டோம். அவர்கள் ஒப்படைக்கவில்லை.
தவிர, புதிய நிர்வாகம் வெற்றி பெற்று பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், முன்னாள் தலைவர் தளபதி, முன்னாள் பொதுச் செயலாளர் சி.ரங்கநாதன், முன்னாள் பொருளாளர் அரவிந்த்ராஜ் ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக கையெழுத்திட்டு 17,000 எங்கியில் இருந்து எடுத்து உள்ளனர்.
இது சட்டப்படி தவறு என மேற்கண்ட மூவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என கடிதம் எழுதி விளக்கம் கேட்டோம். அப்போதும் அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லை.
பல தடவை நேரிலும், போனிலும், கணக்குவழக்குகளை ஒப்படைக்க கேட்டபோதும் ஒப்படைக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர்.
முன்னாள் பொருளாளர் பி.அரவிந்த்ராஜிடம் செயற்குழுவில் இது குறித்துக் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்றும் எந்த வங்கியில் சங்கத்திற்குக் கணக்கு இருக்கிறது என்பதுகூட தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
சங்கத்தின் மேலாளர் அமுதா, வசூலாகும் ரொக்கப் பணத்தையும் முன்னாள் தலைவர் தளபதி வாங்கிச் சென்றுவிடுவார் என விளக்கம் அளித்தார்.
எங்களது தொடர் முயற்சிக்குப் பிறகு, வரவு செலவு என நான்கே வரிகளில் சங்கக் கணக்கை தந்தனர், முன்னாள் நிர்வாகத்தினர். அதில் முன்னாள் தலைவர், முன்னாள் பொருளாளர் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர். அதில், உண்மை தன்மை தெரியவில்லை என்பதால் தான் கையெழுத்திடவில்லை என்று முன்னாள் பொதுச் செயலாளர் சி.ரங்கநாதன் கூறினார்.
அதே நேரம், அறக்கட்டளையின் கணக்கை அவர்கள் அளிக்கவில்லை. வங்கியில் ஸ்டேட்மெண்ட்டை பெற்று வரவு, செலவு கணக்குகளை ஆராய்ந்தபோது பல லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதை அறிந்தோம்.
முன்னாள் தலைவரான தளபதி 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் பல லட்ச ரூபாயை, தன்னுடைய ஜிபேயில் வாங்கியுள்ளார். இது குறித்து கேட்டபோது, அவர் முறையான பதில் தரவில்லை.
அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் தற்போது, தக்க ஆவணங்களோடு எங்களிடம் புகார் தந்துள்ளனர்.
உறுப்பினர்களிடம் பெற்ற 47,98,130 ரூபாயை, சங்கத்தின் வங்கிக் கணக்கில் தளபதி டெபாசிட் ஆகவில்லை என்று சங்கத்தின் ஆடிட்டர் சான்றிதழ் கொடுத்துள்ளார்.
மேலும் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்களின் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து கலை நிகழ்ச்சி நடத்துவதாக Joy Film Box Entertainment என்ற அமைப்பிடம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு பல லட்சங்களைப் பெற்றுள்ளனர், முன்னாள் நிர்வாகிகள். அந்தக் கணக்குகளையும் இதுவரையிலும் ஒப்படைக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
மொத்தமாக சுமார் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு இவர்கள் மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.
இத்தனை மோசடிகள் பற்றித் தெரிந்தும் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் இந்த மோசடிக்கும், ஏமாற்று வேலைக்கும் முன்னாள் பொருளாளர் அரவிந்த்ராஜ், முன்னாள் தலைவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டுள்ளார்.
சங்கத்திற்கும், சங்க உறுப்பினர்களுக்கும் மோசடி செய்த இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துப் பணத்தை மீட்டுத் தருமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்..” என்று குறிப்பிட்டு உள்ளனர்.