இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்ற எம்.ஜி.ஆர்.!
ஜனவரி 17 : எம்.ஜி.ஆர். பிறந்தநாள் சிறப்பு கட்டுரை 1
தற்போது வெளியாகி உள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில், 1965ம் ஆண்டு நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் குறித்து உள்ளது. இதைத் தொடர்ந்து, “அந்த காலகட்டத்தில், தி.மு.க.வின் முகமாக இருந்த எம்.ஜி.ஆர்., இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் தனது படப்பிடிப்புக்காக வெளி மாநிலம் சென்றுவிட்டார்” என்று சிலர் விமர்சிப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த அறிஞர் அண்ணா, “போராட்டங்களில் கலைஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் கலந்துகொள்ளக்கூடாது” என்றார்.
“சிறையில் இருக்கும் போராளிகளை மீட்க சட்டப் போராட்டம் நடத்த வழக்கறிஞர்களும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் செய்வதற்கு மருத்துவர்களும் வெளியில் இருக்க வேண்டும். அதே போல கலைஞர்கள் சிறைப்பட்டால், நமது இயக்கத்தின் பிரச்சாரம் தடைபடும்” என்பது அவரது கருத்தாக இருந்தது.
இதை தீர்மானமாகவே இயற்றினார். அதனால்தான் அந்தப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். நேரடியாக கலந்துகொள்ளவில்லை.
ஆனால், படப்பிடிப்புக்காக கோவா சென்ற எம்.ஜி.ஆரின் மனது முழுதும் தமிழ்நாட்டின் மீது.. இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் மீதுதான் இருந்தது.
அங்கிருந்தபடியே பொருளாதார உதவிகளை வழக்கம்போல் தாராளமாக செய்து வந்தார். அதே போல போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளை, இங்கிருக்கும் தனது ஆட்கள் மூலம் செய்து வந்தார்.
அதே நேரம், 1965 போராட்டத்துக்கு முன்பாகவே,, இந்தி எதிர்ப்பு விசயத்தில் சிறை சென்றவர் எம்.ஜி.ஆர். என்பது பலருக்குத் தெரியாது.
1960ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவின் அப்போதைய பிரதமர் நேரு, சென்னை வந்தார். அவரது அதி தீவிர இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு கறுப்புக் கொடி காட்ட அண்ணா தலைமையிலான தி.மு.க. தீர்மானித்தது.
எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான சத்யா ஸ்டுடியோவில், படப்பணிகள் நிறுத்தப்பட்டன. அதற்குப் பதிலாக, இரவும் பகலும் கறுப்பு கொடிகள் தயாரிக்கும் பணி, ரகசியமாக நடந்தது.
இந்நிலையில்தான் நேருவின் வருகைக்கு முதல் நாள் – 1960 ஜூலை 14 ம் தேதி – அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
எம்.ஜி.ஆர்., தனக்கு அளிக்கப்பட்ட முதல் வகுப்பு சிறை வசதியை தவிர்த்தார். தொண்டர்களுடன் தொண்டராக சாதா வகுப்பு சிறையிலேயே இருந்தார்.
மற்ற திமுக தொண்டர்களுடனும், சாமானியக் கைதிகளுடனும் தரையில் அமர்ந்து சரிசமமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர்களுடனே சிறை உணவையே உண்டார்.. அவர்களுடனேயே படுத்து உறங்கினார். அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்பட்ட மற்ற தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.
மிகப்பெரிய திரை நட்சத்திரமாக இருந்தாலும், கொண்ட கொள்கைக்காக அவர் செயல்பட்ட விதம் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.
சிறைவாசத்தின் போது அவர் வெளிப்படுத்திய மன உறுதியை அறிஞர் அண்ணா வெகுவாகப் பாராட்டினார்.
“என் தம்பி எம்.ஜி.ஆரை சிறையில் தள்ளியதன் மூலம், அவரது புகழை அரசாங்கம் இன்னும் அதிகமாக்கிவிட்டது. அவர் ஒரு திரைக் கலைஞர் மட்டுமல்ல, கொள்கைக்காக சிறை செல்லவும் அஞ்சாத ஒரு போராட்ட வீரன்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேடைகளில் பேசும்போது, “திரைப்படங்களில் போர் புரியும் வாள் ஏந்திய வீரனாக மட்டும் எம்.ஜி.ஆரைப் பார்த்தீர்கள், இன்று நிஜமான போராட்டக் களத்தில் என் பின்னால் அணிவகுக்கும் தளபதியாகப் பார்க்கிறீர்கள்” என்று கூறி தொண்டர்களிடையே அவரை அடையாளப்படுத்தினார்
பிற்காலத்தில் எம்.ஜி.ஆரை “இதயக்கனி” என்று அழைப்பதற்கு இந்தத் தியாக உணர்வும், சிறைவாசமும் ஒரு முக்கியத் தொடக்கமாக அமைந்தது.
முக்கியமான விசயம்.. இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், “போராட்டங்களில் கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டாம். அவர்களது பணி முடங்கினால் இயக்கத்தில் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்றார் அண்ணா.
இதனால்தான் 1965 போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ளவில்லை.
அதுமட்டுமல்ல… முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, எம்.ஜி.ஆர். செய்த முக்கிய செயல்களில் ஒன்று, இந்தித் திணிப்பு எதிர்ப்பு போரில் கலந்துகொண்டோருக்கு செய்த உரிய மரியாதை.
முந்தைய ஆட்சியில் கருணாநிதி, இந்தித் திணிப்பு எதிப்பு போராளிகளுக்கு மதிப்பூதியம் அளித்தார்தான். ஆனால் “90 நாட்கள் சிறையில் இருந்திருக்க வேண்டும். சிறைச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும். அவருக்கு மட்டும்தான் மதிப்பூதியம்” என்பவை அப்போதைய நிபந்தனைகளாக இருந்தன.
எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனவுடன், “30 நாட்கள் சிறையில் இருந்திருந்தாலே மதிப்பூதியம். தவிர சிறைச் சான்றிதழ் வேண்டி அலைய தேவையில்லை. சக தியாகிகள் சான்றளித்தால் போதும். தியாகிகள் இறந்த பிறகு மனைவிக்கு மதிப்பூதியம். இலவச பேருந்து பயணம்” என நடைமுறைப்படுத்தினார்.
இந்த வரலாறு எல்லாம் அறியாதவர்கள்தான், ஏதேதோ பிதற்றுகிறார்கள்.
– டி.வி.சோமு
