யாருக்காக கொடுத்தார்  எம்.ஜி.ஆர்.?: நெகிழும் சைதையார்

யாருக்காக கொடுத்தார்  எம்.ஜி.ஆர்.?: நெகிழும் சைதையார்

வாழும்வரை மட்டுமின்றி மறைந்த பிறகும் வள்ளலாகவே மக்கள் மனதில் வாழ்பவர் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள்.

இன்று அவரது 107-வது பிறந்தநாள் உலகில் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.

பொன்மனச் செம்மல் அவர்களின் அற்புத வழித்தோன்றல்,  பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்,  மனிதநேய அறக்கட்டளை  தலைவர் வாழும் வள்ளல் சைதையார் அவர்கள், எம்.ஜி.ஆர். அவர்களது நினைவலைகளை இன்று தினமலர் நாளிதழில் பகிர்ந்துகொள்கிறார்.

 “உலகம் முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் எவரிடமும் இல்லாத ஒரு தனித்தன்மை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு. அது, தான் உழைத்து சம்பாதித்த பணத்தை, காலம் முழுதும் அள்ளிக்கொடுத்த வள்ளல் தன்மை. புரட்சித் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க, 107வது பிறந்த நாளில், அவரது மனிதநேயத்துக்கு சாட்சியாக இரண்டு சம்பவங்களை இந்த தலைமுறைக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்….

அது, 1961ம் ஆண்டு. சென்னையில் கனமழை..   கோடம்பாக்கம் ரயில்வே பாலம் கட்டப்படாத காலம்…

ரயில் வரும் நேரம் என்பதால், கேட் மூடிக் கிடக்கிறது; நீண்ட வரிசையில் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள், கார்கள் காத்துக் கிடக்கின்றன. வயது முதிர்ந்த ரிக்ஷா தொழிலாளி, உடல் தொப்பலாக நனைந்திருக்க, ‘கிடுகிடு’வென நடுங்கிக் கொண்டிருக்கிறார். …
அந்தப் பக்கம் தனது காரில் வந்த புரட்சித் தலைவர், அதைப் பார்த்துவிடுகிறார்.  வீடு திரும்பியதும் உடனடியாக, அத்தனை ரிக்ஷா தொழிலாளிகளுக்கும், 3 லட்சம் ரூபாய் செலவில் மழைக்கோட்டு வழங்க ஏற்பாடு செய்கிறார்.

இன்னொன்று, 1962ம் ஆண்டு. நம் நாட்டின் மீது, சீனா படையெடுத்தது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க முன்வந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ரேடியோவில், ‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாராளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார்.

அந்த உரையைக் கேட்டவுடன், 75,000 ரூபாய் யுத்த நிதி வழங்குவதாக அறிவித்த முதல் இந்தியக் குடிமகன்  புரட்சித்தலைவர் தான். இதுவே, இந்திய அளவில் தனி மனிதர் ஒருவர் கொடுத்த மிகப்பெரிய நன்கொடை.

அறிவிப்புடன் நின்றுவிடாமல், உடனடியாக அன்றைய தமிழக முதல்வர் காமராஜரை சந்தித்து, 25,000 காசோலை வழங்கச் சென்றார். காமராஜர் வீட்டிலிருந்து கிளம்பி எழும்பூர் ரயில் நிலையம் செல்வதாக அறிந்ததும் உடனே அங்கு சென்று காசோலையைக் கொடுத்தார்.

புரட்சித்தலைவரின் செயலைக் கண்டு மகிழ்ந்த காமராஜர், உடனடியாக இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். இது குறித்து ஒரு நிருபர், ‘எம்.ஜி.ஆர். விளம்பரத்துக்காக உதவி செய்கிறாரா?’ என்று கேட்டவுடன் காமராஜருக்கு பெரும் கோபம் வந்துவிட்டது….

‘சும்மா இருங்கிறேன். நீ கொடுப்பியோ, மாட்டியோ… கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? ‘நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்’னு, எம்.ஜி.ஆர்., திட்டம் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்?

ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை பார்த்ததும், நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’ என்று எம்.ஜி.ஆரின் மனிதநேயத்தை வெளிப்படையாகப் பாராட்டினார். புரட்சித் தலைவர், நாடக நடிகராக இருந்த காலத்திலிருந்தே, மக்கள் சேவையில் ஆர்வம் காட்டினார்….

கடந்த, 1959ம் ஆண்டிலேயே தன் சொந்த நிதி, 3 லட்சம் ரூபாய் ரூபாயில், தன் தாய் பெயரில், ‘தி சத்யா எஜுகேஷனல் அண்ட் சாரிடபிள் சொசைட்டி’ என்ற அறக்கட்டளை தொடங்கி, மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவை செய்தார்.

சினிமாவில் என்னவெல்லாம் வாக்குறுதி கொடுத்தாரோ, அவற்றை எல்லாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றிக் காட்டினார்.

சத்துணவுத் திட்டம், குடிசைகளுக்கு ஒரு விளக்கு, ரேஷன் கடை சீர்திருத்தம், முதியோர் உதவித்தொகை, படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரையிலும் மாதம் தோறும் உதவித் தொகை, விதவைகளுக்கு நிதியுதவி, இட ஒதுக்கீடு, சுயநிதி பொறியியல் கல்லுாரிகள் என்று புரட்சித் தலைவர் கொண்டுவந்த சாதனைத் திட்டங்களை நாள் முழுவதும் எழுதலாம்.

முதல்வர் ஆன பிறகு, ஒரே ஒரு சொத்துகூட வாங்காத புரட்சித்தலைவர், சினிமாவில் சம்பாதித்த பணத்தை காலம் முழுவதும் அள்ளிக் கொடுத்தார்.

மறைந்த பிறகும் சொத்துக்களை காதுகேளாத பள்ளிகளுக்கு எழுதி வைத்தார். இந்த மனிதநேயத்தின் அடையாளமாக, காலம் முழுக்க வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித் தலைவர்!

-சைதை துரைசாமி சென்னை மாநகர முன்னாள் மேயர்.

நன்றி: தினமலர்