“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும்” – ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!
ஒரு ஒளிப்பதிவாளர் தனது பார்வையை காட்சிகளாக மாற்றும் போது அந்த படைப்பின் காட்சிகள் யதார்த்தத்தை அடைகிறது. படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டபோது விஜய் மில்டன் பகிர்ந்து கொண்டதாவது, “தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும்.
அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனி எப்போதும் இயக்குநர்களின் நடிகர். இந்தப் படம் அவருக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை மெருகேற்றி உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், தாலி தனஞ்சயா, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார் மற்றும் விஜய் ஆண்டனி, கே.எல். பிரவீன் எடிட்டராகவும், கலை இயக்குநராக ஆறுசாமியும் பணியாற்றியுள்ளனர்.
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப், பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.