மார்க்ஸ், சேகுவேராவை சினிமா பாடலில் இழுக்கலாமா?
‘கேப்டன்’ எம்.பி. ஆனந்த் தயாரிப்பில் பிரசாத் முருகன் இயக்க பரத், அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ . கே எஸ் காளிதாஸ் – கண்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசை ஜோஸ் ஃப்ராங்க்ளின்.படத்தின் டிரெய்லர் போலவே, ‘போ போ.. ‘ எனத்துவங்கும் பாடலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதில் ( தமிழில் முதன் முதலாக?) புரட்சியாளர்கள் மார்க்ஸ், சேகுவேரா ஆகியோரையும் கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார், பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்.
உலகமே ஒன்றா சமத்துவமாக இருக்க பொதுவுடமைத் தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் மார்க்ஸ், தேச எல்லை கடந்து மக்களுக்காக புரட்சி செய்தவர் சேகுவேரா என்பது அனைவருக்குமே தெரியும்.
இப்படிப்பட்டவர்களை, காதல் பாடலில் இழுக்கலாமா என்று தோன்றலாம்.
உலகத்தினர் அனைவரின் மீதான காதல் கொண்டவர்கள்தானே இவர்கள். தவிர, மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னி மீதும், சேகுவேரா தன் காதல் மனைவி அலெய்டா மீதும் வைத்திருந்த காதலும் அளப்பரியது.
இவர்களது கடிதங்கள் மூலமே அந்த காதலை அறியலாம்.
ஆம், மானுட சமூகத்தையே புரட்டிப் போட்ட பொதுவுடைமை சித்தாந்தம் தந்த கார்ல் மார்க்ஸுக்கு அத்தகைய முழுமையை தந்தவர் ஜென்னி.அவருக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில், “அன்பு கொண்ட பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது; ஜென்னி போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன் “ என உருகி உருகி எழுதி உள்ளார்.
அதே போலத்தான் சேகுவேராவும்.
“எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் ஏன் எனில் என்னிடம் பாதங்கள் மட்டுமே இருக்கின்றன. வேர்கள் இல்லை” என்று அவர் கூறியதும்…
தன்னைச் சுற்றி நீண்டிருக்கும் துப்பாக்கிகளைப் பற்றிய அச்சமே இன்றி தனது இறுதி வார்த்தைகளாக “என்னைச் சுடுவதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்… கோழையே சுடு… மண்டியிட்டு வாழ்வதை விட நின்று கொண்டு சாவதே மேல்” என்று முழங்கியதையும் அறிவோம்..அவர் தனது காதல் மனைவி அலெய்டாவுக்கு எழுதிய கடிதம் பலரும் அறியாதது.
“ அன்பு அலெய்டா..
உன்னை மனைவியாக பெற்றதையும் என் வாழ்க்கையின் அற்புத விஷயங்களாக கருதுகிறேன்.
உடல்நலத்தை கவனித்துக் கொள். குழந்தைகளை பார்த்துக் கொள்.
உன்னை, குழந்தைகளை, எனது அன்புக்குரிய மனிதர்களை பிரிய நேர்கிறதே என்று வேதனைப் படுகிறேன்.
ஆம், என் பிரியமானவளே! உன்னைப் பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்திற்காக எப்போதும் தியாகங்கள் செய்ய விரும்புகிற மனிதன் நான் என்பதை புரிந்து கொள்வாய் என நம்புகிறேன்.
தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன்.
காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும் எண்ணத்தால் உங்களோடு இருப்பேன்.
இந்தப் போராட்டத்தில் இறக்க நேருமானால் சாகும் தறுவாயில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்று எழுதினார் சேகுவேரா.
இப்படிப்பட்ட காதல் நாயகர்களை, காதல் பாடலில் கொண்டுவந்தது தவறில்லையே!
தவிர, படத்தில் வரும் வசனங்களில் இரண்டை குறிப்பிட்டால் படத்தின் போக்கை அறியலாம்…
“சாமிய சுத்தி வர்றதிலேருந்து, சாப்பிடுற உணவ தீர்மானிக்கிறவரை நீங்களே முடிவெடுத்தா அதுக்கு பேர் என்ன… சர்வாதிகாரம்தானே!”
“தப்பு பண்ணுனா அடிக்கிறது ரைட்டுன்னு அப்ப தோணுச்சி…. இப்ப லெப்ட் தான் ‘ரைட்’னு தோணுது”
-இப்படி படத்துக்கு வீரியமான வசனமும் ஜெகன் கவிராஜ்தான்.
ஜெகன் கவிராஜ்
ஆக… இப்பட பாடலில் மார்க்ஸ், சேகுவேரா ஆகியோரை கொண்டு வந்த ஜெகன் கவிராஜுக்கு பாராட்டுகள்.
இதற்கான கதை அமைப்புடன் படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் பிரசாத் முருகன், தயாரிப்பாளர் ‘கேப்டன்’ எம்.பி. ஆனந்த் ஆகியோருக்கு வாழ்த்துகள்!
வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் சென்னை’ வெளியாகிறது.
அந்த பாடல்..
https://www.youtube.com/watch?v=9t1X-pMZHV0