‘மெட்ராஸ்காரன்’: திரைப்பட விமர்சனம்

விநாடி நேர சம்பவம், ஒட்டுமொத்த வாழ்க்கையையே எப்படி புரட்டிப்போட்டு விடுகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
சென்னை தொழிலதிபரான நாயகன் ஷேன் நிகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் தனது திருமணத்தை நடத்த விரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலையில், எதிர்பாராமல் நடக்கும் சின்ன சம்பவம்… அதைத் தொடர்ந்து நடக்கும் சிறு விபத்து… அவரது வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை.
தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார், மலையாள நடிகர் ஷேன் நிகம். காதல் காட்சிகளிலும் சரி, குடும்பத்தினரிடம் ஜாலியாக பேசுவதிலும் சரி, ஆக்ரோசமாக மோதுவதும் சரி.. எல்லாம் சிறப்பு. அதே நேரம் பேச்சில் மலையாள வாடை. அதைத் தவிர்க்கலாம்.
நாயகி நிஹாரிகா சில காட்சிகளே வந்துபோகிறார். வந்த அளவுக்கு சிறப்பாக நடித்து இருக்கிறார்.
கலையரசனுக்கு சிறப்பான வேடம். நல்ல மனிதன்.. ஆனால் முன்கோபி.. அதனால் ஏற்படும் பாதிப்பு.. என்று சிறப்பாக நடித்து உள்ளார்.
கலையரசனின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா தத்தா, சில காட்சிகளில் வந்தாலும் அருமையாக நடித்து உள்ளார்.
நாயகனின் தாய் மாமாவாக நடித்திருக்கும் கருணாஸ், பாசத்தில் நெகிழ வைக்கிறார். இப்படி ஓர் தாய் மாமன் கிடைப்பாரா என்று ஏங்க வைத்து விடுகிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தையாக நடித்திருக்கும் தீபா, நண்பராக நடித்திருக்கும் லல்லு என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கினறன. பின்னணி இசை காதை பிளக்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார், சண்டைப்பயிற்சி இயக்குநர், கலை இயக்குநர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த விதம், திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், எந்த கதையாக இருந்தாலும் தனது மேக்கிங் மூலம் கவனம் ஈர்த்துவிடுவார் என்பதை நிரூபித்திருக்கிறார்.
காதலில் ஆரம்பித்து திருமணம் நோக்கி நகர்ந்து, அடுத்து ஆக்சன்… த்ரில்லர் என அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் வாலி மோகன் தாஸ்.
அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.