மாஸ்கோவில் ‘மாமனிதன்’ சீனு ராமசாமி!

பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுவரும் ‘மாமனிதன்’ திரைப்படம், இன்று மாஸ்கோ திரைப்பட விழாவிலும் திரையிடப்படுகிறது. இதற்காக, ரஷ்ய அரசு அழைத்ததை அடுத்து, இயக்குநர் சீனு ராமசாமி அங்கு சென்றுள்ளார். மேலும், தனது ‘புகார்ப் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பை ரஷ்ய அரசு நூலகத்துக்கு அளித்தார்.
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் ‘மாமனிதன்’. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர்.
மேலும் இந்தோ பிரெஞ்ச் சர்வதேச திரைப்பட விழா, டோக்கியோ திரைப்பட விழா உள்ளிட்டவற்றில் விருதுகளை வென்றது ‘மாமனிதன்’ திரைப்படம். அதோடு புனே கிரேட் மெசேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழையும் பெற்றது. மேலும், சர்வதேசத் திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப் பட்டதோடு விருதுகளையும் குவித்தது.
அந்த வகையில், ரஷ்யாவின் புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ‘மாமனிதன்’ படம் திரையிடத் தேர்வானது. இதற்காக ரஷ்யன் மையம் சார்பில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் மையத்தில் படக்குழுவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 முதல் 27 வரை நடக்கும் 45-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில், உலக சினிமா பிரிவில் மாமனிதன் திரைப்படத்தை ரஷ்ய அரசாங்கம் இன்று ‘மாமனிதன்’ படத்தை திரையிடுகிறது. மேலும் ரஷ்ய அரசின் அழைப்பை ஏற்று இயக்குநர் சீனு ராமசாமி மாஸ்கோ சென்று நிகழ்வில் பங்கேற்று உள்ளார்.
தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே பெருமை அளிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, இயக்குநர் சீனு ராமசாமியின், ‘புகார்ப் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
அந்த புத்தகத்தை, மாஸ்கோ பிப்ளியோ டிகா லெனினா என்னும் இடத்தில் பியோதர் தஸ்தோயோவஸ்கி சிலை அருகே அமைந்த ருஷ்ய அரசு நூலகத்தில் ஒப்படைத்தார் சீனு ராமசாமி. இந்த புத்தகம், கிழக்காசிய இலக்கியப் பிரிவுக்கு அனுப்பப் பட்டது.
இதுவும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமையே!