“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்”: நடிகர் வடிவேலு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் மேடையில் பேசிய வடிவேலு, “எனக்கு கேப்பே கிடையாது. மீம்ஸ் மூலம் எப்போதும் உங்களுடன் தான் இருக்கேன். ஒரு சிறந்த கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். உதயநிதி ஒரு சிறந்த கதையை தேர்தெடுத்துள்ளார். இந்த கதையில் நடித்தது பெருமையாக உள்ளது.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் என்னை பாட வைத்திருக்கிறார். என்னுடைய தாய் என்னை பாட தூண்டி, இந்த படத்தில் எனக்கு வெற்றி முகத்தை கொடுத்துள்ளார். அவரை நான் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.
தேவர் மகனுக்கு பின்னர் மாமன்னன் எனக்கு ஒரு பெரிய படமாக இருக்கும். இந்த கதையை வைத்து பலரும் பல அனுமானங்களை செய்து வருகிறார்கள். இது ஒரு சுயமரியாதை கலந்த படமாக இருக்கும். இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத் தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார். அரசியலில் மக்கள் பணி செய்யவிருப்பதால், இதை நிறுத்தி வைத்துள்ளார். வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவன். அதே விஷயம் மாரி செல்வராஜிடமும் இருந்தது. ஊசி முனையைவிட கூர்மையாக காட்சிகளை எடுக்கிறார். மாரி செல்வராஜின் வலியை சொல்லியுள்ளார். அந்த வலி எல்லா மனிதர்களிடமும் உள்ளது.
இந்தப் படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ்தான். இந்த கதையை ஒத்துகொண்ட உதயநிதி மன்னாதி மன்னன். இது போன்ற படத்தில் மீண்டும் நடிக்க ஆசை. ஆனால் இம்மாதிரியான படங்கள் கிடைப்பது கஷ்டம்” என்றார் வடிவேலு.
விழாவில் கமல்ஹாசன், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.