லக்கி பாஸ்கர்: திரைப்படம் விமர்சனம்

லக்கி பாஸ்கர்: திரைப்படம் விமர்சனம்

ஆயிரம் ஆயிரம் சட்டதிட்டங்கள் இருக்கும் இந்த நாட்டில், எப்படி கோடி கோடியாக மோசடியாக சம்பாதித்து வெளிநாடுகளுக்கு எடுத்துக்கொண்டு ஓடி செட்டிலாகிவிடுகிறார்கள் என்பதை சொல்கிறது லக்கி பாஸ்கர் படம்.

துல்கர் சல்மான் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். மனைவி, குழந்தை, நோயாளி அப்பா, வேலைக்கு முயற்சி செய்யும் தம்பி என எளிய குடும்பம். ஏகப்பட்ட கடன்.

வங்கியில் சிறப்பாக உழைக்கிறார். ஆனால் எதிர்பார்த்த பிரமோஷன் வேறு ஒருவருக்குப் போய்விடுகிறது. அதோடு மேலதிகாரியால் அவமானப்படுத்தப் படுகிறார்.

இதனால் மனம் நொந்தவர், எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என முடிவெடுக்கிறார்.வெளிநாட்டு கார்களை வாங்கி விற்பவருக்கு, பணம் தேவைப்பட… வங்கியில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொடுக்கிறார். மறுநாள் கணக்கை நேர் செய்து விடுகிறார்.

இதற்கிடையே, ஷேர் மார்க்கெட் மாபியாவுக்கும் வங்கி பணம் போகிறது. அதிலும் கமிசன்.

ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுகிறார்.. அங்கும் பல தகிடுதித்தம்… பணம் குவிகிறது.

கணக்குக் காட்டுவதற்காக, லாட்டரியில் தனக்கு பரிசு விழ வைக்கிறார். மனைவி பெயரில் ஊறுகாய் கம்பெனி துவங்கி, அதில் லாபம் கொட்டுவதாக கணக்குக் காண்பிக்கிறார்.

ஒரு கட்டத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

அதிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதை!

துல்கர் சல்மான் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவரை கண்முன் நிறுத்துகிறார். மனைவியிடம் காட்டும் காதல், மகனிடம் வெளிப்படுத்தும் பாசம், உறவினர்கள் – அலுவலக அதிகாரிகள் அவமானப்படுத்தும்போது மனம் நோவது, பணம் நிறைய வந்தவுடன் தலைகாட்டும் ஆணவம்.. மொத்தத்தில் அசத்தலான நடிப்பு.

அவரது மனைவியாக வரும் மீனாக்‌ஷி செளத்ரியும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவனுக்காக தனது குடும்பத்தைப் பகைத்துக்கொள்வது, கணவனின் குணம் மாறுகிறது என்றதும் அதை முகத்தில் அடித்த மாதிரி எடுத்துரைப்பது என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

ஐஷா கான், ஹைபர், ராம்கி உள்ளிட்ட அனைவரும் தங்களது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையில், பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. 1980 கலாகட்டத்துக்கே நம்மை கொண்டு செல்கின்றன. அதே போல பின்னணி இசையும் அற்புதம். அதுவும் ஒரு கதாபாத்திரம் போல படம் நெடுக வந்து ரசிக்க வைக்கிறது.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. அந்தக்கால மும்பையை கண்முன் நிறுத்துகிறது. பெரிய வங்கி, துல்கரின் வீடு, ஓட்டல் என அனைத்து இடங்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறது கேமரா.

அப்பாவி மக்களின் வங்கி சேமிப்பு, எப்படி எல்லாம் எவரால் பயன்படுத்தப்படுகிறது.. எப்படி எல்லாம் பெரிய பெரிய மோசடிகள் நடைபெறுகின்றன, அவர்கள் எப்படி சட்டத்தில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதை நுணுக்கமாகச் சொல்லி இருக்கிறார். இயக்குநர் வெங்கி அட்லூரி.

நாட்டிற்கு பெரும் கேடான கருப்பு பணத்தை கண்டுபிடித்து, அதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க எத்தனையோ அரசு அமைப்புகள் உள்ளன. அவை எப்படி செயல்படுகின்றன என்பதை இந்தப் படத்தைப் பார்ப்பது அவசியம்.

தவறுகள் நடக்காமல் இருக்க அதிகமான சட்டங்கள் உள்ளது நம் நாட்டில்தான்… அதே நேரம் தவறுகளை எளிதாக செய்வதற்கு சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதும் நம் நாட்டில்தான் என்பதைச் சொல்லி அதிரவைக்கிறது படம்.

– டி.வி.சோமு

 

Related Posts