லவ் ஸ்டோரி: திரைவிமர்சனம்

லவ் ஸ்டோரி: திரைவிமர்சனம்

“அட.. ஒரு அரேஞ்ச்டு மேரேஜ், லவ் மேரேஜ் ஆனதே!” என்று கவித்துவமாய் (!) சொல்லவைக்கும் கதை.

தேனியில் துணிக்கடை வைத்திருக்கிறார் விக்ரம் பிரபு.  திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. “இருபத்தியஞ்சு வயசுல நிறைய பொண்ணுங்க வந்துச்சு.. அப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னே.. இப்ப பாத்தியா” என ஆத்திரப்படுகிறார் அப்பா கஜராஜ்.

இந்த நிலையில் தரகர் மூலமாக கோவையில்  ஒரு பெண்ணைப் பார்க்க குடும்பத்துடன் கிளம்புகிறார்கள். அங்கு சுஷ்மிதா பட்டை பெண் பார்த்துவிட்டு கிளம்புகிற வேளையில், இவர்கள் சென்ற மினி பஸ் ரிப்பேர் ஆகிவிடுகிறது.  அதை சரி செய்ய இரண்டு நாள்  ஆக… பெண் வீட்டிலேயே  தங்குகிறார்கள். பிறகு புறப்படலாம் என்றால், கொரோனா ஊரடங்கு வந்துவிடுகிறது. ஆகவே தொடர்ந்து அங்கேயே தங்க வேண்டிய நிலை.

சரி, வீட்டிலேயே திருமணத்தை நடத்திவிடலாம் என திட்டமிடும் நேரத்தில், திடுக்கும் சம்பவம் நடக்கிறது.

அது என்ன சம்பவம்… பிறகு என்ன நடந்தது என்பதுதான்  கதை.முதலில், ஊரடங்கு நேரத்தில் புதிய (பெண்) வீட்டில் தங்கும் நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்த கதாசிரியரை பாராட்ட வேண்டும்.

நாயகன் விக்ரம் பிரபு பொருத்தமான தேர்வு. திருமணம் தள்ளிப்போகிறதே என்கிற கவலை, நாம் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்தானே என்று முத்தம் கொடுக்க முற்பட்டு அறை வாங்கி அவமானத்தை பார்வையிலேயே வெளிப்படுத்துவது, முரட்டு மாமாவை அதட்டி அடக்குவது என சிறப்பாக நடித்து இருக்கிறார். அடிதடி, மசாலா பக்கம் போகாமல் இது போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்கலாம்.

நாயகிகள் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் இருவருமே அழகு, அழகு. நடிப்பும் இயல்பு.

நாயகனின் மாமாவாக வந்து  அனைவரையும் கவர்ந்துவிட்டார், அருள்தாஸ். பெரும்பாலான குடும்பங்களில் இப்படி ஒரு மாமா இருக்கத்தான் செய்வார்.  எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக பேசுவது, பிரச்சினை ஆக்குவது என்று இருப்பார்கள். அந்த கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார் அருள்தாஸ்.

அதே நேரம் அந்த கதாபாத்திரத்தின் மீது கொஞ்சம் எரிச்சல் வருமே தவிர தீவிர கோபம் வராது. சில  காட்சிகளில் நமது உறவில் எவரையேனும் நினைவுபடுத்தும்.  அப்படி உறவு இல்லாதவர்களுக்கு, “ஹூம்.. நமக்கு இப்படி ஒரு மாமா இருந்தால்” என்று சிந்திக்கவும் வைக்கும்.

அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார் அருள்தாஸ்.

அதே போல் நாயகனின் தந்தையாக வரும் கஜராஜ் வழக்கம்போல இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மாமாக்களின் டார்ச்சரை அந்த கேரக்டர் மூலம் திரையில் அழகாக நடித்து காட்டி இருக்கிறார். இவர்களோடு படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.திடீரென கேமியோ ரோலில் புயல் போல் வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டுச் செல்கிறார் சத்யராஜ்.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சிறப்பு. இரு வீடு, கிராமம் என சில லொகேசன்கள்தான்.  ஆனால் அலுப்பு ஏற்படுத்தாத வகையில் வித்தியாசமான கோணங்களில் படமாக்கி இருக்கிறார்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வழக்கம்போல் ஈர்க்கிறது. அதே நேரம், மெகந்தி சர்க்கஸ் பாடல்களை நினைவுபடுத்துகிறது.பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்துக்கு முன்பே ஒரே வீட்டில் தங்கினால் எப்படி இருக்கும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எப்படி  அதை எதிர்கொள்வார்கள், அதற்குள் திருமணம் –  காதல் என்று ரசிக்கத்தக்க வகையில் அளித்துள்ள இயக்குநர் சண்முக பிரியனை பாராட்டலாம்.

ரேட்டிங்:  3.5/5

 

  • டி.வி.சோமு