லோகா முதல் பாகம் சந்திரா: திரை விமர்சனம்

லோகா முதல் பாகம் சந்திரா: திரை விமர்சனம்

தொன்மக் கதை ஒன்றை, தற்கால கதாபாத்திரங்களைக் கொண்டு அளித்து ரசிக்க வைத்து இருக்கிறார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்களும் நண்பர்கள். உயர் படிப்புக்கான தயாரிப்புக்காக பெங்களூருவில்  ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.  எதிர் பிளாட்டில் குடிவருகிறார் இளம் பெண் சந்திரா.  சந்திரா மீது சன்னிக்கு ஈர்ப்பு.  ஒரு கட்டத்தில், சந்திராவுக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதை தெரிந்துகொள்கிறார். ஆனாலும் சந்திரா மீதான ஈர்ப்பு குறையவில்லை.

ஒரு நாள், சந்திராவுக்கு ஆபத்துவர, அவரைக் காப்பாற்ற முனைகிறார் சன்னி.  அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.

பறக்கும் சக்தி கொண்ட சூப்பர் வுமன் சந்திராவாக, கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்து இருக்கிறார். ஆவேசமாக சண்டைக் காட்சிகளில் தூள் பறத்தும் அவர்,  மற்ற நேரங்களில் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்வது ரசிக்க வைக்கிறது.  சிறப்பான நடிப்பு.

நிஜயமாகவே பயந்த சுபாவம் கொண்டவராக, வருகிறார் நாயகன்  நஸ்லென். நகைச்சுவைக் காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார். “உங்க வீட்ல குடிக்கிறதுக்கு ஏதும் இருக்குமா… ரத்தம் தவிர..” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது ஒரு உதாரணம்.  அதே போல, தன் கேர்ள் பெஸ்டிக்கு ஓடி ஓடி உதவ முற்படுவதிலும் முத்திரை பதிக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக – பெண்களை வெறுப்பவராக –  அதிரடி காட்டி இருக்கிறார் சாண்டி.  ஆணாதிக்கத்தை.. வெறுப்பை அசால்ட்டாக பார்வையிலேயே வெளிப்படுத்தி நமது வெறுப்பை சம்பாதிக்கிறார். அபார நடிப்பு.அருண் குரியன், சந்து சலிம்குமார் ஆகியோரின் காமெடி காட்சிகள் ஓகே ரகம்.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி அசத்தி இருக்கிறார். குறிப்பாக இரவு காட்டி, நாயகி பறக்கும் காட்சி ஆகியவை அருமை.

ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்துக்கு பக்கபலம்.சாமன் சாக்கோ எடிட்டிங் கச்சிதம்.

கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பு.

கதாபாத்திரங்கள் அறிமுகம், நகைச்சுவை மற்றும் அமானுஷ்ய காட்சிகள்  என இடைவேளை வரை விறு விறு.  அதன் பிறகான புராண கால பிளாஷ்பேக் சிறப்பு.‘சந்திரா யார்’ எனத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் பார்வையாளர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்குக் கொண்டு சென்று, ‘என்னது நாகர்ஜூனாவா?’ என நம்மைத் திகைப்புக்கு உள்ளாக்கி வெளிப்படுத்திய தருணம் அடிப்பொலி!

பறக்கும் நாயகி எங்கிருந்து வருகிறார், என்ன பொருளை எடுத்து வந்தார், அவரது குழுவின் முக்கிய நோக்கம் என்ன… என்பது போன்ற கேள்விகளுக்கு அடுத்த பாகத்தில் விடை அளிப்பார்கள் போலும்.

அதே நேரம் பட முடிவில்… முடிவில்லாத முடிவாக இழுத்துக்கொண்டே இருப்பதை சரி செய்யலாம்.

 

 

Related Posts