L2: Empuraan விமர்சனம்: பாராட்டும், கண்டனமும்!

L2: Empuraan விமர்சனம்: பாராட்டும், கண்டனமும்!

பெரும் வெற்றி பெற்ற, லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கிறது எல்.2: எம்புரான் திரைப்படம்.

முதல் பாகத்தில் மாநில முதலமைச்சரின் இறப்புக்குப் பிறகு அப்பொறுப்புக்கு வந்த அவரது மகன் ஜதின் ராமதாஸ், அரசியல் விளையாட்டுகளில்  அதிரடியாக இறங்கி,  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார். தன் மீதான அவப்பெயரைப் போக்க அகில இந்திய அளவிலான இந்துத்துவ கட்சியுடன் இணைய திட்டமிடுகிறார்.

இதற்கு அவரது சகோதரி பிரதர்சினி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் குரேஷ் ஆப்ராம் என்கிற ஸ்டீஃபர்ன் நெடும்பள்ளி பத்திரிகையாளர் கோவர்தனின்  முயற்சியால் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

அவரால் தனது மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடிந்ததா என்பது மீதி!

கதை 2002 குஜராத் கலவர பின்னணியில் இருந்து விரிகிறது.

மாநிலத்தை கூறாவிட்டாலும் 2002-ம் ஆண்டு என்று குறிப்பிட்டதன் மூலம், குஜராத் கலவரம் என்பதை உணர்த்தியதோடு வன்முறை நிகழ்த்தியவர்கள் அரசியல் தலைவர்களாக உருவெடுப்பது என்பதையெல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்..
அதிலும் இந்து மதவாத கட்சி தலைவருக்கு பஜ்ரங் (தள்!) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்… (எப்படி சென்சார்ல விட்டாங்க!)
மாநிலத் தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் துறைகளை ஏவி மிரட்டும் காட்சிகளும் உண்டு.
மதவாத கட்சியை ஏன் ஆட்சிக்கு வந்தது என காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் தலைவர்களிடையேயான வார்த்தைப் போர், பிரியதர்சினி பதவியேற்கும் காட்சி போன்ற சில, அற்புதம்.
இதற்கு நமது பாராட்டுகள்!
படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஏன் ஒவ்வொரு பிரேமும் கூட பிரம்மாண்டமாய் திரையில் தெரிய வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து உழைத்திருக்கிறது இயக்குநர் பிருத்விராஜ் உள்ளிட்ட படத்தின் டீம். சுஜித் வாசுதேவனின் கேமரா, தீபக் தேவின் பின்னணி இசை, அகிலேஷ் தேவின் எடிட்டிங் என அனைத்தும் கதைக்கு தேவையானதை மிகச் சிறப்பாக தந்திருக்கின்றன.  அதே போல இவற்றை தாங்கிப் பிடிக்கும் அச்சாணியான திரைக்கதையில் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரான முரளி கோபியும் சிறப்பான கவனம் செலுத்தி இருக்கின்றனர்.

மோகன்லால் முதல் பாகத்தை காட்டிலும் இதில் படு ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார். நடிப்புக்கு வேலை இல்லையென்றாலும் படம் முழுக்க தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவுகிறார். பிருத்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் வேலையை திறம்ப்ட செய்துள்ளனர். இயக்குநராக பிருத்விராஜுக்கு இது 3-வது படம். பல இடங்களில் அவர் தனித்து தெரிகிறார். உதாரணமாக, குஜராத் தொடர்பான காட்சிகளை காட்டிய விதம் சிறப்பு. அவசியம் இருந்தும் கூட வன்முறைகளை அப்பட்டமாக காட்டாமல் தவிர்த்தது பாராட்டுக்குரியது.

அதே நேரம், மாநில அரசியல் கதைக்கு ஏன், ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து என்றெல்லாம் சுற்றுகிறார்கள் என தெரியவில்லை.
வடிவேலு ஒரு படத்தில், “இதைத்தானே அவனும் சொன்னான்.. அப்படி செஞ்சிருந்தா என் மூக்கோட போயிருக்கும்ல.. இப்ப டேபிள் சேரை உடைச்சு, ரணகளமாக்கிட்டியே” என்பாரே.. அந்த காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
மோகன்லால், ஸ்டைல் என்கிற பெயரில் நடக்கும் நடை, நிற்கிற பாடி லேங்குவேஜ் காமெடியாக இருக்கிறது. அதுவும் ஒவ்வொரு காட்சியிலும் இப்படியா? (ஒருவேளை அவரது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ..)
நடு காட்டில் பெண் தவிக்க.. திடுமென அங்கு ஆல மர விழுதைப் பிடித்து வந்து விழும் ஹீரோ, வில்லன்களிடம் சண்டை போடுவது, எவ்வளவு பெரிய (சமூக) பிரச்சினையாக இருந்தாலும் கிளைமாக்ஸில் தனி ஒரு வில்லனை கொன்றுவிட்டால் தீர்வு கிடைத்துவிடும் என்கிற படங்களில் இதுவும் ஒன்றாகிப்போனது… இப்படி மைனஸ்கள் நிறைய உண்டு.
எல்லாவற்றையும் விட, இந்தப் படத்திலும், “அணை பலவீனமா இருக்கு.. மக்களுக்கு ஆபத்து…” என்பதைப் போன்ற காட்சிகளை வைத்து இருக்கிறார்கள்.

“கேரளாவில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணை பலவீனமாக இருப்பதால், மக்களுக்கு ஆபத்து. அதை குண்டு வைத்து தகர்க்க வேண்டும்.

வெள்ளையர் காலத்தில் திருவிதாங்கூர் மன்னரை மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த  மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருக்கிறது” என்றெல்லாம் வசனங்கள் வருகின்றன.

சிறந்த ஆய்வாளர்களை அனுப்பி சோதனைசெய்ததில்  முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது.  இருந்தும் இதுபோன்ற காட்சி வசனங்களை வைத்து இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழிலும் டப் செய்து இங்கே வெளியிட வேண்டும் என்கிற காரணத்தினால் அடக்கி வாசித்து இருக்கிறார்கள்.
சேட்டன்களால், முல்லைப்பெரியாறு குறித்து சேட்டை பண்ணாமல் இருக்க முடியாது போலிருக்கிறது! 
இதற்கு நமது கண்டனங்கள்!

மொத்தத்தில் முதல் பாகத்தில் மாஸ் மசாலாவை தாண்டி இருந்த நேட்டிவிட்டியை ஓரங்கட்டிவிட்டு முழுக்க முழுக்க பான் இந்தியா ஆடியன்ஸை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்று இருக்கிறது.

ரேட்டிங்: 2.7/5

  • டி.வி.சோமு

Related Posts