“ஆடு, கோழி பலி கேட்டா அது சாமியே இல்லே!”: ‘கும்கி’ பிரபு சாலமன்!

“ஆடு, கோழி பலி கேட்டா அது சாமியே இல்லே!”: ‘கும்கி’ பிரபு சாலமன்!

“திரைப்படங்களில் கிறிஸ்துவ மதத்தை திணிக்கிறார்” என்று ஏற்கெனவே பிரபு சாலமன் மீது சர்ச்சை எழுந்தது. இந் நிலையில் அவரது கும்கி 2 திரைப்படத்தில், “எந்த சாமி பலி கேட்கும்.. ரத்தம் கேட்டா அது சாமியா..” என்கிற வசனமும், அதற்கான காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

இயக்குநர் அகத்தியனிடம் உதவியாளராக இருந்த பிரபு சாலமன், ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ திரைப்படத்தின் மூலம் 1999ம் ஆண்டு இயக்குநராக தடம் பதித்தார். கொக்கி, லாடம், தொடரி என இவரது படங்கள் கவனத்தை ஈர்த்தன.

குறிப்பாக 2010ல் விதார்த், அமலா பால் நடிப்பில் உருவான மைனா திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதே போல 2012ல் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான கும்கி படமும் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் கும்கி படத்தின் இரண்டாம் பாகமாக, கும்கி 2 திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

காட்டு யானை ஒன்றை பிடித்து, யாகம் என்கிற பெயரில் எரித்துக் கொல்ல அரசியல்வாதிகள் திட்டமிட.. அதை நாயகன் முறியடித்து யானையை காப்பாற்றுகிறாரா என்பதே கதை.

இந்தப் படத்தின் செய்தியாளர் காட்சி முடிந்த பிறகு இயக்குநர் பிரபு சாலமனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது, “தந்தத்துக்காக யானைகளை கொல்வது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் ஆடு, மாடு போல, யானையையும் யாகம் என்கிற பெயரில் பலி கொடுக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறீர்களே” என கேட்கப்பட்டது.

அதற்கு பிரபு சாலமன், “நான் இந்தியா முழுதும் பல மாநிலங்கள்.. காடுகள் சுற்றி இருக்கிறேன். சில பகுதிகளில் யானையை பலி கொடுப்பது நடக்கிறது. வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை..” என்றார்.

இதைத் தொடர்ந்து அவரிடம், “2001ம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார் ஜெயலலிதா. அப்போது அவர், கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை என சட்டம் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். குறிப்பிட்ட அந்த சட்டம்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என நினைத்து அச்சட்டத்தை திரும்பப் பெற்றார். ஆக, ஆடு, கோழி பலியிடுவது மக்களின் சம்பிரதாயமாக உள்ளது. படத்தில் நீங்கள், “எந்த சாமி பலி கேட்கும்.. ரத்தம் கேட்டா சாமியா..” என்றெல்லாம் வசனம் வைத்து இருக்கிறீர்களே..” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “வாயில்லா ஜீவன்களை புண்படுத்துவது கொடுமை…ஆடு, கோழி ஆகியவையும் உயிர்கள்தான்… அதுக்குள்ள செண்டிமெண்ட் பார்க்கலை… குதிரையை பலி கொடுக்கும் அஸ்வமேத யாகம் போன்றவையும் மூடத்தனம்” என்றார்.

ஏற்கெனவே பிரபு சாலமன் இயக்கிய செம்பி திரைப்படத்தின் இறுதியில், பைபிள் வாசகம் இடம் பெற்றதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Related Posts