‘குடிசை’ ஜெயபாரதி மறைவு: நடிகர்கள் சத்யராஜ், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்!

‘குடிசை’ ஜெயபாரதி மறைவு: நடிகர்கள் சத்யராஜ், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்!

தமிழ் மாற்று சினிமாக்களின் முன்னோடி ‘குடிசை’ ஜெயபாரதி  மறைந்தார்.

இவர், நுரையீரல் தொற்று காரணமாக ஓமந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 77.

‘குடிசை’ என்ற யதார்த்த சினிமாவை இயக்கியவர் ஜெயபாரதி. இதன் மூலமே குடிசை ஜெயபாரதி என அறியப்படுகிறார். இப்படம் 1979ல் வெளியானது.

ஜெயபராதி அடிப்படையில் பத்திரிகையாளர். இயக்குநர் சிகரம் எனப் போற்றப்பட்ட பாலசந்தரின் ஒரு படத்தை கடுமையாக விமர்சித்து பத்திரிகையில் எழுதினார் ஜெயபாரதி. அதைப் படித்த கே.பாலசந்தர், “அவனால ஒரு படம் எடுக்க முடியுமா” என்று கோபப்பட்டு இருக்கிறார். இது ஜெயபாரதியின் காதுகளுக்கு வந்ததும், அடுத்த சில நாட்களிலேயே படம் எடுக்க கிளம்பி விட்டார். அதுதான் குடிசை.

இதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்த கமலா காமேஷ் கதை நாயகியாக நடித்தார். பல விருதுகளை பெற்ற படம் இது. அதன்பிறகு ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் ஐந்து, உச்சிவெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம் உள்பட பல படங்களை இயக்கினார்.

கடைசியாக 2010ம் ஆண்டு புத்திரன் என்ற படத்தை இயக்கினார். இதில் சங்கீதா கதையின் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதை பெற்றது.

இவரது மனைவி ப்ரீத்தி. இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

கமர்சியல் சினிமாக்களை ஒதுக்கிவிட்டு யதார்த்த சினிமாக்களையே இவர் எடுத்ததால் பொருளாதார நிலையில் பின்தங்கியே இருந்தார். சில வருடங்களுக்கு முன்னும், கடந்த (2023)ம் வருடமும் உடல் நிலை குன்றி சிரமப்பட்டார். அப்போது, பொருளாதார ரீதியாக சிரமப்படும் அவருக்கு உதவி செய்யுங்கள் என அவரது படங்களை நேசிப்பவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நடிகர் சத்யராஜ், எஸ்.வி.சேகர் ஆகியோர் உதவி செய்தனர்.

தற்போது ஓமந்தூரா் மருத்துவமனையில்  நேற்று ( 05.12.2024) ஜெயபாரதி சேர்க்கப்பட்டு இருப்பதை அறிந்து அவரது மனைவியாருக்கு அலைபேசினேன்.

அவர், “நூரையீரல் பிரச்சினை. அதனால் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த மருத்துவமனையில், “கிரிட்டிக்கலாக இருக்கிறது” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

அதன் பிறகு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தோம். இங்கே திக்குதிசை தெரியவில்லை. நடிகர் எஸ்.வி.சேகருக்கு அலைபேசினோம். அவர், என் கணவர் குறித்து மருத்துவமனை டீனிடம் தெரிவித்தார். தற்போது என் கணவர் ஐ.சி.யு.வில் இருக்கிறார்” என்றார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், இன்று காலை ஜெயபாரதி மறைந்தார்.

இந்நிலையில் ஆவடியில் உள்ள ஜெயபாரதியின் இல்லத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர்கள் சத்யராஜ், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

குடிசை ஜெயபாரதி அவர்களது மனைவியாரின் எண்: +91 97917 21963

அவர்களது வீட்டுக்கு கூகுள் மேப்:

https://maps.google.com/maps?q=13.1449397%2C80.1167574&z=17&hl=en

Related Posts