ஃபேமிலி படம்: திரை விமர்சனம்
குடும்ப உறவின் சிறப்பை, மன நிறைவை ஃபீல்குட் மூவியாக அளித்து இருக்கிறார்கள்.
திரைப்படம் இயக்குவதற்காக, தயாரிப்பாளர்களை நாடி அலைகிறார் நாயகன். இறுதியில் ஒரு தயாரிப்பாளர், இவரது கதையை ஓகே செய்கிறார். தயாரிப்பாளர், பிரபல ஹீரோவாக விளங்கும் தனது தம்பியிடம் கதை சொல்லச் சொல்கிறார். நாயகனும் கதை சொல்கிறார். கதையில் ஹீரோ தனது விருப்பத்துக்கு மாறுதல் சொல்கிறார். இது நாயகனுக்கு உடன்பாடாக இல்லை.
அவரை நீக்கிவிட்டு தானே படத்தை தயாரிக்க தீர்மானிக்கிறார் தயாரிப்பாளர். தான் ஏமாந்தது தெரிந்து குமைகிறார் ஹீரோ.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
லட்சிய கனவுகளை சுமந்து அலையும் இளைஞாக -நாயகனாக – சிறப்பாக நடித்து உள்ளார் உதய் கார்த்திக். ஒவ்வொரு இடத்திலும் நிராகரிகப்படும்போது வெளிப்படுத்தும் விரக்தி, ஒரு கட்டத்தில் தனது தாயாரிடம் காண்பிக்கும் கோபம் என அசத்துகிறார்.நாயகனின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, அற்புதமான ஒரு அண்ணனை கண்முன் நிறுத்துகிறார். தம்பிக்கு ஆறுதல் சொல்வது, அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் துடித்துக் கிளம்புவது, லைப்ல செட்டில் ஆவது என்றால் என்ன என்பதைச் சொல்வது.. அற்புதம்!
இன்னொரு அண்ணனாக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் கச்சிதம்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, பிள்ளைகள் மீதான பாசம்.. அதே நேரம் அவர்களது எதிர்காலம் குறித்த பயம் என நடுத்தர குடும்பத்து அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
நாயகனின் காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்ஷா பாத்திரம் உணர்ந்து நடித்து உள்ளார். மதுரை காதல் காட்சிகள் சிறப்பு.
நாயகனின் நண்பராக, நடிகர் அஜித் ரசிகராக நடித்திருக்கும் சந்தோஷ், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு கவர்கிறது. அதுவும் மதுரை காட்சிகளை காதலுடன் படம் பிடித்து அளித்து இருக்கிறது.
அனீவியின் இசையும், பின்னணி இசையும் படத்துடன் துணையாக நீரோடை போல ஓடி வருகின்றன.
சுதர்சனின் படத்தொகுப்பு கச்சிதம்.
திரைப்படம் இயக்கும் முயற்சியில், தயாரிப்பாளரைத் தேடும் உதவி இயக்குநர்கள் எதிர்கொள்ளும் வேதனைகள், வலிகள், அவமானங்களை பல படங்களில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவை, ரசிகர்களுக்கு அந்நியமாகவே இருக்கும்.
இந்தப் படத்தில், “நம்ம வீட்டுப் பையன் ஜெயிக்கணும்” என்கிற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர் செல்வ குமார் திருமாறன். அதுதான் அவரது வெற்றி.. படத்தின் வெற்றியும்கூட!
“இந்தக் கால படங்களில் வன்முறையும், ஆபாசமும் தலைதூக்கி இருக்கின்றன” என்று குமுறும் அதே நேரம், நல்ல படங்களை பார்த்து ரசிப்பதும் அவசியம். அது அந்த படக்குழுவினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அப்படியோர் படம் – ஃபேமிலி படம்.
- டி.வி.சோமு