’கூச முனிசாமி வீரப்பன்’ ஓடிடி  திரை அலசல்

’கூச முனிசாமி வீரப்பன்’ ஓடிடி  திரை அலசல்

’கூச முனிசாமி வீரப்பன்’ஓடிடி திரையில் அதாரத்துடன் வெளிப்பத்திய டாக்மென்டரி ஆகும். வீரப்பனின் பெரும்பாலான கதைகள் காவல்துறை, பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டு கேட்டிருப்போம். ஆனால், இந்தத் தொடரில் வீரப்பனே தன் கதையைச் சொல்வதனால் உண்மையை நம்மால் புரிந்துந்கொள்ள முடிகிறது. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கூச முனிசாமி வீரப்பன்’.

காட்டிலிருந்த வீரப்பனை நேரடியாக சந்தித்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் பதிவு செய்த காணொலிகள், குரல் பதிவுகள் கடிதங்களை அடிப்படையாக கொண்ட 6 எபிசோடுகளும், ஆங்காங்கே சில புனைவுக் காட்சிகளுடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பகுதி 1: ‘ஒரு கொலகரான வீரன்னு சொல்லக் கூடாது; ஆனா வீரப்பன் ஒரு வீரன்’ என நக்கீரன் கோபாலின் பேச்சுடன் முதல் எபிசோடான ‘First blood’ தொடங்குகிறது.

இந்த எபிசோடில் வீரப்பனின் குழந்தைப் பருவம், வேட்டை அனுபவம், சுடுவதில் அவருக்கு இருந்த ஆர்வம், வனத்தைச் சார்ந்திருந்த அவர்களின் வாழ்க்கை சூழல், வனச்சட்டம், யானையை கொன்று தந்தத்தை விற்பது, தாய்பாசம், தாயின் மரணத்துக்கு கூட வரமுடியாத நிலை என அடுக்கடுக்கான காட்சிகளாக முழு முடிகிறது முதல் பாகம். இறுதியில் அவர் முதல் கொலையை செய்ய தூண்டியதற்கான லீடும் கொடுக்கப்படுகிறது.

பகுதி 2: ‘Into the Wild’ எபிசோடில் வீரப்பனின் முதல் சிறைவாசம், துரோகம், அவர் செய்த முதல் கொலை, அதற்கான காரணம், வீரப்பனின் சகோதரி மரணம் ஆகியவற்றை வீரப்பன் சொல்ல அதையொட்டிய பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி, பொதுமக்களின் தகவல்களுடன் சம்பவங்கள் கோர்வையாக விவரிக்கப்படுகிறது. இதில் டிஎஃப்ஓ ஸ்ரீனிவாசனின் கொலை குறித்த வீரப்பனின் பார்வையை தவிர்த்து, மற்ற பார்வைகளும் முன்னிறுத்தப்படுவதால் அவர் நல்லவரா, கெட்டவரா என்ற எந்த முடிவுக்குள்ளும் நாம்மால் வர முடியவில்லை.

பகுதி 3: The War’என்ற மூன்றாவது எபிசோடின் தொடக்கத்திலேயே ஒரு பெரும்கூட்டமாக வரும் காவல் துறையினர் சுற்றிவளைத்தலிலிருந்து வீரப்பன் தப்பித்த அனுபவங்களை அவரே ஆக்‌ஷனுடன் விவரிக்கும் இடங்கள் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

காவல் துறைக்கும், வீரப்பன் குழுவுக்கும் நடந்த சண்டைகளும், கண்ணிவெடித் தாக்குதலில் 22 காவல்துறையினர் உயிரிழந்தது, காவல் அதிகாரி கோபால கிருஷணனின் ஆடு திருடும் அராஜகத்தை பேசும் பகுதியில், அவர் மொத்தமாக இதுவரை 1000 ஆடுகளை திருடி சாப்பிட்டத்தை வீரப்பன் சொல்ல, ஊர் மக்களில் ஒருவரும் சரியாக அதே 1000 எண்ணிக்கையைக் குறிப்பிடும் இடம் உண்மைத் தன்மையை அதிகரிக்கிறது .

பகுதி 4: அதுவரை வீரப்பனின் வாழ்க்கை அனுபவத்தை பேசிக்கொண்டிருக்க தொடரின், 4-வது எபிசோடான ‘The Hunt for?’ பார்வையாளர்களை  கண்கலங்க வைக்கிறது.

மின்சாரத்தை பாய்ச்சுவது, பாலியல் வன்கொடுமை,சாப்பாடு கொடுக்காமல் அடிப்பது,நிர்வாணப்படுத்தி,இயற்கை உபாதைகளுக்கு கூட அனுமதிக்காதது, கர்ப்பிணி பெண்களை கொடுமைபடுத்தியது என தமிழ்நாடு – கர்நாடக அதிரடிப்படை எளிய மக்கள் மீது நடத்திய வன்முறையை அழுத்தமாக பேசுகிறது இந்த பகுதி.

‘ஒர்க் ஷாப்’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட ‘எஸ்டிஎஃப் கேம்ப்’ வதைமுகாம்களில் நடந்த சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களே நேரடியாக பேசும் இடங்கள் களங்கவைக்கிறது.

அதேசமயம் கொடூரத்தை நிகழ்த்திய அதிகாரிகளுக்கு விருதுகளும், பாதிக்கப்பட்டவர்கள் மீதான ‘தடா’ வழக்கின் சிறை தண்டனையும், பெரும் அத்துமீறல் நிகழ்த்தியிருப்பதை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. இது தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ‘சதாசிவம்’ கமிஷனும், அதன் அறிக்கை வெளிக்கொணர நடந்த போராட்டமும் என அரசியல் பதிவாக இந்த எபிசோட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருப்படுகிறது.

பகுதி 5-வது எபிசோடு ‘Bait Worms’- தன்னைக் காட்டிக்கொடுத்தவர்களைத் தேடித் தேடி வீரப்பன் வேட்டையாடியது, அவரைக் காட்டிகொடுக்கச் சொல்லி சாமானியர்களுக்கு காவல்துறை கொடுத்த நெருக்கடி என இருவருக்கும் இடையில் சிக்கித்தவித்த மக்களின் உணர்வின் வலியை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த எபிசோடு. இதில் அப்பாவி சிறுவன் ஒருவன் கொல்லப்படுவதும் அதற்கு வீரப்பன் சொல்லும் காரணமும் அவருக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துகிறது.

இருமுனை கத்தியாக இரண்டு தரப்பிலும் மாட்டிக்கொண்டு பலியாகும் அப்பாவி  மக்களின் நிலை கொடுமையானது என்பதை பதியவைக்கிறது இந்த எபிசோடு.

பகுதி 6: ஆறாவது மற்றும் இறுதி எபிசோடான  ‘The Beginning’ – 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த வீரப்பனின் பேச்சு, மற்றும் ஜெயலலிதா மீது அவர் வைத்த  விமர்சனம், திமுக மீதான பார்வை, ரஜினிக்கு அவர் கொடுக்கும் அரசியல் அட்வைஸ், வீரப்பனின் அரசியல் பார்வை ஆகியவற்றை பதிவு செய்திருக்கிறது. மேலும் பொது மன்னிப்புக்கு கோரி சரணடைய முன்வருகிறார் வீரப்பன். அதையொட்டி நடக்கும் சில சம்பவங்களுடன் தொடரின் முதல் சீசன், இரண்டாம் சீசனுக்கான தொடக்கத்துடன் முடிவடைகிறது.

இந்த ஆவணத்தொடரின் பலம் அது பல்வேறு தரப்பு பார்வைகளை முன்வைத்து ‘நல்லவர், கெட்டவர்’ என்ற அனுமானத்தை பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறது. ஏராளமான பேட்டிகள், தகவல்கள், சம்பவங்கள்,வீரப்பனின் நேரடி வாக்குமூலம்  இவை அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி எந்த இடத்தில், எவ்வளவு தேவை என்பதை சுருக்கியும், நீட்டியும் தனது எழுத்தால் தொடரின் தரத்தை உயர்த்தியிருக்கும் ஜெயசந்திர ஹாஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் கூட்டணிக்கு பாராட்டுகள்.

இவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்தி  திரையில் கொண்டுவந்து வரலாற்று ஆவணமாக மாற்றியுள்ளார் இயக்குநர் சரத் ஜோதி. அடர்வனத்தையும், புனைவுக்காட்சிகளையும், இயற்கையின் அதன் சாரம் குறையாமல் மக்களின் நிலையை கண் முன் காட்சி படுத்துகிறது ராஜ் குமாரின் ஒளிப்பதிவு.

எங்கேயும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தும் ராம்பாண்டியனின் ‘கட்ஸ்’ அவரின் உழைப்பை பேசுகிறது.

நக்கீரன் கோபால், வழக்குரைஞர் மோகன், தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் ஜீவா தங்கவேலு, வழக்கறிஞர் தமயந்தி, திரைக்கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான ரோகிணி, ஓய்வுபெற்ற டி.ஜி.பி அலெக்சாண்டர் ஐபிஎஸ், நக்கீரனின் முன்னாள் நிருபர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், வீரப்பனுடன் இருந்தவர்களின் தகவல்களுடன், வீரப்பனே நேரடியாக பேசுவது எல்லாம் சம்பவம் நடந்த இடத்துக்கே நம்மை கூட்டிச் செல்கி றது.