‘கொன்றால் பாவம்’: தமிழ் இயக்குநருக்கு கர்நாடக அரசு கவுரவம்!
கடந்த 2023ம் ஆண்டு, தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் , சந்தோஷ் பிரதாப் , ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்து வெளியான, ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்தப் படத்தின் இயக்குநர் தயாள் பத்மநாபன், தான் ஏற்கெனவே 2018ல் கன்னடத்தில் இயக்கிய, ‘ஆ கரால ராத்ரி’ படத்தைத்தான், கொன்றால் பாவம் என தமிழ்ப்படுத்தினார்.
பெரும் பணத்துடன் வரும் பயணி, வழித்தங்கலுக்காக ஒரு குடும்பத்தை அணுகுகிறார். அங்கே இரவு தங்குகிறார். அப்போது என்ன நடக்கிறது என்பதை மிக சுவாரஸ்யமாகவும், நுண்ணிய உணர்வுகளுடனும் சொன்ன படம் அது.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கன்னட படங்களுக்கான விருதுகளை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் வழங்கினார்.
இதில், ‘ஆ கரல ராத்திரி’ படத்துக்கு சிறந்த படத்துக்கான (கே.சி.என். கவுடா) விருதும், சிறந்த இயக்குநருக்கான (எச்.எல்.என். சிம்ஹா) விருது, தயாள் பத்மநாபனுக்கும் கிடைத்தன.
இது குறித்து அவர், “மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என தெரிவித்து உள்ளார்.
தயாள் பத்மநாபன், தமிழ்நாட்டின் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர். பணி காரணமாக, கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் குடியேறினார்.
2003 ஆம் ஆண்டு ஓகே சார் ஓகே என்ற திரைப்படத்தின் மூலம் கலைத்துறையில் தடம் பதித்தார். தொடர்ந்து படங்களை இயக்கிய அவர், படங்களை தயாரிக்கவும் துவங்கினார்.
திரைப்பட விருதுகளில் நடக்கும் ஒரு சார்பு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிக கட்டணம், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் நடந்த முறைகேடுர ஆகியவற்றுக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, தான் கலைஞன் மட்டுமல்ல போராளியும்கூட என நிரூபித்தவர் தயாள் பத்மநாபன்.
அவரது சிறந்த படைப்புக்கு உரிய விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள்!

