“முத்தக்காட்சியில் ஒத்துழைத்த ஹீரோயின்!”: ஐ.பி.எல். பட விழாவில் டி.டி.எப். வாசன்!குஷிதா
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வினில் நடிகர் கிஷோர் பேசுகையில், ”சினிமா மக்களின் மீடியம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் இங்கு மேடையில் வீற்றிருக்கும் இயக்குநர் கே. பாக்யராஜ். மக்களுக்காக மக்களுடைய கதைகளை எடுத்து அதன் மூலமாக நிறைய கேள்விகளை உண்டாக்கி தீர்வினை கண்டவர். தற்போது காலம் மாறி இருக்கிறது. சினிமா கிட்டத்தட்ட சிஸ்டத்தின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இதுபோன்ற மக்களின் குரலாக ஒலிக்கும், கேள்வி கேட்கும் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையிலான ஒரு படமாக ‘ஐபிஎல்’ இருக்கிறது. அதில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், உடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படக்குழுவின் துணிச்சலுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார் .
நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில், ”இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.
நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்.
இயக்குநருக்கு முதலில் கர்ணன் – அதன் பிறகு கருணாகரன்- இறுதியாக அவருடைய அசல் பெயரான கருணாநிதியையே டைட்டிலில் இடம் பெற வைத்திருக்கிறார்.
படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த படத்தின் இரண்டாம் பகுதியில் என்னை நானே திரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி மேஜிக் செய்திருந்தார்.
உண்மை சம்பவத்தை தழுவி, அது சற்று கற்பனையை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம். செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது. நவம்பர் 28ம் தேதி உங்கள் வீட்டுப் பிள்ளை வாசனின் முதல் படம் ‘ஐபிஎல்’ வெளியாகிறது. அனைவரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
