“கரூர் பலி: விஜய், ரசிகர்கள் காரணம்!”: அஜித் சொன்னது இதுதான்!

“கரூர் பலி: விஜய், ரசிகர்கள் காரணம்!”: அஜித் சொன்னது இதுதான்!

டி.வி.சோமு சிறப்பு பக்கம்:

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பேசிய கரூர் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் அஜித்தும் நேற்று பேசி இருக்கிறார். வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக பல கருத்துக்களை கூறி இருக்கிறார். அது கரூர் சம்பவம் குறித்துதான் என்பதை எளிதில் அறிய முடியும்.

அவர் பேசியதை இப்படித்தான் அர்த்தப்படுத்த முடியும்..

அவர், “கரூர் சம்பவம், ஒட்டுமொத்த திரையுலகத்தையும் இது மோசமாக சித்தரிப்பதாக உள்ளது. இங்கே கூட்டத்தைக் கூட்ட விரும்புகிறோம்.. இது முடிவுக்கு வர வேண்டும்..

கிரிக்கெட் போட்டியைப் பார்க்கக் கட கூட்டம் வருகிறது.. அங்கே இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் மட்டும் ஏன் நடக்கிறது..?

ஹாலிவுட் நடிகர்கள்கூட இதை விரும்புவதில்லை. குறிப்பாக முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஊடகங்கள் ஊக்குவிக்கக் கூடாது.

ரசிகர்களின் அன்பு தேவைதான் அதற்காகத்தான் உழைக்கிறோம். குடும்பத்தைவிட்டு நீண்ட நேரம் படப்பிடிப்பில் இருக்கிறோம்.. மன அழுத்தம், தூக்கமின்மை.. அதை வேறு விதமாக காட்டலாம்.

ஆகவே, கரூர் சம்பவத்துக்கு நாம் அனைவருமே காரணம்” என்று பேசி இருக்கிறார் அஜித்.

“வீண் கூட்டம் – ரசிகர் கும்பல் – தேவை இல்லை” என்கிறார் அஜித். இதைச் சொல்ல அவருக்கு முழு உரிமை இருக்கிறது. தனது “பட்டத்தைத்” துறந்ததோடு, ரசிகர் மன்றத்தையும் கலைத்தவர் அவர். “படம் பாருங்கள்.. பிடித்திருந்தால் ரசியுங்கள்.. பிடிக்காவிட்டால் விமர்சியுங்கள்” என்றவர்தான் அவர்.

ஆகவே “ஹாலிவுட்டிலேயே இப்படி நடப்பதில்லை.. தமிழ்நாட்டில் ஏன்” என்கிற கேள்வி நியாயமானது.

தவிர, “முதல் நாள் முதல் காட்சியை ஊக்குவிப்பதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்” என்கிற அவரது கருத்தும் மிகச் சரியானதே.

யு டியுப்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், பிரபல சேனல்களும் யு டியுப் தரத்துக்கு இறங்கிவிட்டன. “இன்று மாஸ் ஹீரோவின் படம் ரிலீஸ்” என பெரிய செய்தி போல கூவுகின்றன. ஆகவே அஜித் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

அதே நேரம், “விஜய்க்கு ஆதரவாக அஜித் கருத்து” என்ற தலைப்பில் இந்த பேட்டியை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

ஆனால் விஜய் உள்ளிட்ட அனைவரையுமே அஜித் விமர்சனம் செய்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

“கரூர் சம்பவத்துக்கு காரணம் விஜய் அல்ல” என்று அஜித் சொல்லவில்லை.

“விஜய் மட்டுமே காரணம் இல்லை” என்றுதான் சொல்லி இருக்கிறார்.

அதாவது, “விஜயும் காரணம்” என்றுதானே அதற்கு அர்த்தம்?

இதையேதான் நான், பல தொலைக்காட்சி விவாதங்களிலும், யு டியுப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகளிலும் தெரிவித்து வருகிறேன். மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசையும் விமர்சிக்கிறேன். அதே போல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, மோடியின் ஒன்றிய பாஜக அரசு ஆகியவற்றையும் விமர்சித்து வருகிறேன்.

அஜித்,  மிக தைரியமான மனிதர்தான்.  கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, நடந்த நட்சத்திர விழாவில், “அய்யா.. மிரட்டி கூப்பிட்டு வர்றாங்க” என வெளிப்படையாக குரல் எழுப்பியவர்.

தற்போதும்கூட தன்னால் முடிந்ததைச் சொல்லி இருக்கிறார். அதுவருக்குப் பாராட்டுகள்.

இன்னொரு விசயத்தில் அஜித் மீது நமக்கு வருத்தம் ஏற்படுகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர் அஜித். தமிழ்நாட்டில்தான் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடந்த கொடூர சம்பவம் குறித்துத்தான் பேசுகிறார்.

ஆனால் ஆங்கில ஊடகத்துக்குத்தான் பேட்டி அளித்து இருக்கிறார்.

இவரைப் போலவே தமிழ் படங்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்களுக்கு ஆங்கில மோகம் இருக்கிறது.

ஏன், தமிழ் ஊடகத்துக்கு பேட்டி அளிக்கக் கூடாதா?

திரைப்படங்களில், “யேய், மாமே, ” என்றெல்லாம் லோக்கல் தமிழ் பேசும் இவர்கள், பேட்டி என்றால் மட்டும் நுனி நாக்கு ஆங்கிலத்தில், ஆங்கில ஊடகத்தில்தான் பேசுவார்களா..

அஜித் சிந்திக்க வேண்டும்!

– டி.வி.சோமு

Related Posts